முதல்வர் கொடுத்த வீட்டுமனையில் வீடு கட்டவிடாமல் மர்ம நபர்கள் கொலை மிரட்டல்: தாசில்தாரிடம் மனு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே முதல்வர் கொடுத்த வீட்டுமனைப்பட்டாவில், இருளர்களை வீடு கட்ட விடாமல், அவர்களுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுவதாக  இருளர் இனமக்கள் தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சி வடதில்லை கிராமத்தில் உள்ள ஏரிதாங்கல் கரை மீது 50 வருடங்களாக கொட்டகை அமைத்து 12 குடும்பங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் வசித்து வந்தனர். இவர்கள் பலமுறை வீட்டுமனை பட்டா  கேட்டு திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.  

இந்நிலையில், கடந்த வருடம் ஜூலை மாதம் 23ம் தேதி கலெக்டரிடம் மீண்டும் இறுதியாக மனு கொடுத்தனர். பின்னர், இவர்களுக்கு அதே வருடம் நவம்பர் மாதம் பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை ஊராட்சி கூரம்பாக்கம் கிராமத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வடதில்லை கிராமத்தை சேர்ந்த 12 குடும்பங்களுக்கு பட்டா வழங்கினார். ஆனால், இருளர் இன மக்கள் வீடு கட்டுவதற்கு சென்னையை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என ஊத்துக்கோட்டை தாசில்தாரிடம் நேற்று 12 குடும்பங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் மனு கொடுத்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஊத்துக்கோட்டை (பொறுப்பு) தாசில்தார் லதா உங்கள் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுப்படும் என கூறினார். இது குறித்து இருளர் இன மக்கள் கூறுகையில், ‘பேரிட்டிவாக்கம் ஊராட்சி வடதில்லை கிராமத்தில் ஏரிக்கரை தாங்கல் கரை மீது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல்வர் வீட்டுமனைப்பட்டா வழங்கினார். அதன்படி, நாங்கள் வீடுகட்ட தொடங்கினோம். ஆனால், சென்னையை சேர்ந்த சிலர், அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. நீங்கள் இங்கு வீடு கட்டினால் அந்த வீடுகளை எரித்து விடுவோம் என எங்களை வீடு கட்ட விடாமல் மிரட்டுகிறார்கள்’ என்றனர்.    

Related Stories:

>