×

நீட் தேர்வுக்கு விண்ணப்பம் தமிழகத்தில் 13% குறைந்தது: படிப்பறிவு குறைந்த உ.பி, பீகாரில் அதிகரிப்பு

சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை (நீட்) நடத்துவதில் மத்திய அரசு அதிக கெடுபிடிகளை காட்டி வருவதால், தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 13 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், கல்வியாளர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 70 ஆயிரம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதுதவிர மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும். இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க நீட் என்னும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 4,150 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1,700 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கும்போது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் முறையின் கீழ் மாணவர்களுக்கு மருத்துவ சீட் வழங்கப்பட்டது. மேலும் பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் அடிப்படையாக வைத்து கவுன்சலிங் நடத்தி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.  இந்த நடைமுறையை மாற்றி தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களையே எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து, அதை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

திடீரென அறிவிக்கப்பட்ட இந்த நீட் தேர்வால் பெரும்பாலான மாநிலங்களை சேர்ந்த ஏழை, எளிய மற்றும் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு படித்த மாணவர்களால் தான் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மாநில பாடத்திட்டங்களை படித்த மாணவர்களால் நீட் தேர்வை எழுத முடியாமல் போனது. குறிப்பாக தமிழகத்தில், நீட் தேர்வு முதல் முறையாக நடைமுறைக்கு வந்தபோது, தமிழக அரசு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படித்தவர்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை.

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு பக்கத்து மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால் பலர் நீட் தேர்வு எழுதுவதையே கைவிட்டுவிட்டனர். மேலும், பிளஸ் 2 தேர்வுக்கும் மதிப்பு இல்லாமல்போய்விட்டது. நீட் தேர்வில் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற வேண்டும் ஆசை அதிகரிக்கத் தொடங்கியது. அதனால் தெருவெங்கும் நீட் பயிற்சி மையங்கள் பெருகத் தொடங்கியதுடன் கட்டணங்களும் அதிகரித்து தற்போது வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை அதிக கட்டணம் செலுத்தி, நீட் பயிற்சி மையங்களில் சேர்த்துவிடுகின்றனர்.

பிளஸ்2 வகுப்பில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு சூதாட்டம் போல மாறி அதிக பணம் உள்ளவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் இடங்களை பிடிக்க போட்டி போட்டு படித்து வருகின்றனர். குறுக்கு வழியிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு சிக்கியும் உள்ளனர். வடமாநிலங்களில், போலியான ஆட்களை வைத்து தேர்வு எழுதும் விவகாரம் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். வட மாநிலங்களில்தான் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேநேரத்தில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழக மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத மற்றும் மருத்துவ படிப்புக்கான இடங்களை பெற முடியாத நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன.
இதன்படி நாடு முழவதும் சுமார் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். தேர்வு மே மாதம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு அதற்காக நாடு முழுவதும் 2,546 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னர் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், ஜேஇஇ, நீட் தேர்வுகள் மட்டும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 1, 13ம் தேதிகளில் மேற்கண்ட தேர்வுகள் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேற்கண்ட தேர்வுகளை ஊரடங்கு காலம் முடிந்த பிறகு நடத்த வேண்டும் என்று 11 மாநிங்களை சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், ஜேஇஇ, நீட் தேர்வுகள் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் எதிர்கால கல்வியை கருத்தில் கொண்டும் நீதி மன்ற வழிகாட்டுதல்களின்படியும் ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரையும், நீட் தேர்வு செம்படம்பர் 13ம் தேதியும் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமை தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்வை எந்த காரணம் கொண்டும் ஒத்தி வைக்க முடியாது என்று திட்டவட்டமாகவும், உறுதியாகவும்  தேசிய தேர்வு முகமை உள்ளது. இதனால் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், பெற்றோர் மாணவர்கள் வற்புறுத்தலின் பேரில்தான் ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தெரிவித்த மத்திய அமைச்சர் ரமேஷ்பொக்ரியால், ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த 8 லட்சத்து 58 ஆயிரம் பேரில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஹால்டிக்கெட்டுகள் பெற்றுள்ளனர், நீட் தேர்வுக்கு 15 லட்சம் பேர் ஹால்டிக்கெட்டுகள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ள மாநிலங்களான, பீகார், ஆந்திரா, அஸ்ஸாம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், போன்ற மாநிலங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் கணக்கை பார்த்தால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதற்காக தேர்வு மையங்களையும் அதிகரித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 13 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய தேர்வு முகமையின் மாநில வாரியாக தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியல் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

* 2019ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் 84 தேர்வு மையங்கள் மூலம் 56 ஆயிரத்து 907 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 78 ஆயிரத்து 960 பேர் 192 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இது கடந்த ஆண்டைவிட 28 சதவீதம் அதிகம்.
* குஜராத் மாநிலத்தில் 2019ம் ஆண்டில் 142 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அதில் 79 ஆயிரத்து 872 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 80 ஆயிரத்து 219 பேர் 214 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
* கர்நாடகாவில் கடந்த ஆண்டு 194 தேர்வு மையங்கள் மூலம், 1 லட்சத்து 15 ஆயிரத்து 882 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 298 தேர்வு மையங்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 587 பேர் எழுதுகின்றனர்.
* மத்திய பிரதேசத்தில்  கடந்த ஆண்டு 84 தேர்வு மையங்கள் மூலம் 54 ஆயிரத்து 454 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 144 தேர்வு மையங்கள் மூலம் 58 ஆயிரத்து 860 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
* தமிழகத்தில் கடந்த ஆண்டு 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 714 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 238 தேர்வு மையங்கள் அதிகரித்தும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தான் தேர்வு எழுத உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டை ஒப்பிடும் போது 13 சதவீதம் குறைவு.

* படிப்பறிவு குறைந்த மாநிலங்கள் பட்டியல்
நாட்டில் படிப்பறிவு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சண்டிகர், சத்தீஷ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உள்ளிட்ட அனேக மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மொத்த படிப்பறிவு 74.04 சதவீதமாக இருந்தது. 2013ம் ஆண்டில் 77.3 சதவீதம், 2015ம் ஆண்டு 71.96 சதவீதமாக இருந்தது. 2018ல் 74.37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Tags : Tamil Nadu ,Bihar ,UP , Application for NEET examination, in Tamil Nadu, 13% lower, less literate, UP, Bihar, increase
× RELATED தமிழகத்தில் வெப்ப அலை வீசும்; மஞ்சள்...