கழிவுகள், முட்புதர்களால் மக்கள் அவதி மயானபாதையை சீரமைக்க வடக்கநந்தல் பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடக்கநந்தல் பேரூராட்சியில் அக்கராயபாளையம், கச்சிராய பாளையம், மேட்டுப்பாளையம், வடக்கநந்தல், வெங்கட்டம்மாபேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட கிராமங்களை அடக்கிய 18 வார்டுகள் உள்ளன. இங்கு பொருளாதாரததில் பின்தங்கிய மக்கள் அதிகம் உள்ளனர். அக்கராயபாளையம் புதுகாலனி ( வார்டு எண் 18), கச்சிராயபாளையம் காலனி (வார்டு எண் 17) பகுதியை சேர்ந்த மக்களுக்கான மயானபாதை கோமுகி ஆற்றின் கரையோரம் உள்ளது. இந்த மயானபாதை சுமார் 800 மீட்டர் இருக்கும். இந்த சாலை சீரமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலை தார்சாலை யாக இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய்கள் இருந்தும் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் வழிகிறது.

  மேலும் விசாலமான பரந்த மயான பாதை சாலை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு குறுகி உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் முட்செடிகள், புற்கள் முளைத்து காணப்படுகிறது. தற்போது தார் சாலை 2 அடி நடைபாதையாக மாறி வட்டது. இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மேலும் இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும்போது முள்ளின்மேல் நடந்து செல்லும் அவலம் உள்ளது. மேலும் பொதுமக்கள் இயற்கை உபாதைக்காக பயன்படுத்துவதால் மயானபாதையில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் உள்ள மகளிர் கழிப்பிட வளாகம் பாழடைந்து போய் உள்ளது.   

இந்த சாலையை அகலப்படுத்தி, சாக்கடை கால்வாய் கட்டி, தார்சாலை அமைக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே இந்த சாலையை அகலப்படுத்தி தார்சாலையாக மாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டினால் பட்டினி போராட்டம் நடத்தப்படும் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>