×

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான விதிமுறைகளை அரசாணையாக வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை: டெல்டா மண்டலங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் பழனிசாமி, காவி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

இதையடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான இந்த அறிவிப்பை சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கும் சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஏராளாமானோர் வரவேற்பு தெரிவித்தனர். எனினும், அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதற்கான முறையான நடவடிக்கைகளை பின்பற்றி அரசாணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட நிலங்களை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம். அதிக விளைச்சலை காணும் பொருட்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். வேளாண் தொழில்கள் தொடர்பான தொழிலகங்களை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படும் என விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விதிகள் அனுமதிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Government ,Tamil Nadu ,zones , Protected Agricultural Zone, Regulation, Government of Tamil Nadu
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...