×

ராஜீவ்காந்தி மற்றும் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைகளில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி ஆய்வை நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசி ஆய்வை தமிழகத்தில் நடத்த ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, போரூர் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். Remdesivir, Tocilizumab, Enoxaparin போன்ற உயிர் காக்கும் வீரியம் மிக்க மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

மனிதகுலத்தை கொரோனா நோய் தொற்று தாக்குதலிலிருந்து பாதுகாக்க தடுப்பூசிகள் மட்டுமே பேருதவியாக இருக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து.பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஒருதடுப்பூசியை கண்டுபிடித்து இந்தத் தடுப்பூசியை ஆரோக்கியமான நபர்களுக்கு செலுத்தி
நோய் எதிர்ப்புத் திறனை கண்டறியும் ஆராய்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வல்லமை வாய்ந்ததாக அமையும் என்பது உலக அளவில் மருத்துவ நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இந்திய அளவில், தடுப்பூசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னையை தெரிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அவர்கள் முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆய்வு 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான நபர்களிடம்மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சிக் கழகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து மேற்கொள்ளும்.

சென்னையைப் பொறுத்த வரையில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் மனிதர்களின் உடலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்து விடும். மேலும், 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்புசக்தியையும் உடலில் உருவாக்கி விடும். இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் பணிகள் கொரோனா தடுப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Govt Shield Corona Vaccine ,Palanisamy ,Porur Ramachandra Hospitals ,Rajiv Gandhi , Rajiv Gandhi, Porur Ramachandra, Hospital, Govshield, Corona, Vaccine, Chief Palanisamy, Order
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...