×

சிவகாசி அருகே 1,200 ஆண்டுகள் பழமையான குடவரை கோயில் கண்டுபிடிப்பு : சுண்ணாம்பு பாறையில் அமைக்கப்பட்டது

சிவகாசி: சிவகாசி அருகே 1,200 ஆண்டுகள் பழமையாக சுண்ணாம்பு பாறை குடவரை கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சி சொக்கலிங்கபுரம் அர்ஜூனா நதி கரையில் சுண்ணாம்பு பாறையிலான குடவரை கோயில்  உள்ளதாக தொல்லியல் துறை ஆர்வலர்கள் சிவநாராயணன், பாண்டியராஜன் ஆகியோர்,  மதுரை தொல்லியல் துறையினரிடம் தகவல் அளித்தனர்.  அதனைத்தொடர்ந்து தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் மகாலிங்கம்  ஆகியோர் கோயிலில் ஆய்வு செய்தனர். தொல்லியல் ஆர்வலர் பாண்டியராஜன் கூறுகையில், ‘‘மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் அர்ஜூனா நதி எம்.புதுப்பட்டி, காளையார்குறிச்சி  வழியாக செல்கிறது. இதில் காளையார்குறிச்சி - சொக்கலிங்கபுரம் கரையில் இந்த சுண்ணாம்புக்கல் குடவரை கோயில் அமைந்துள்ளது. கோயில்  இருப்பதே தெரியாத அளவிற்கு கரைக்குள் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தொல்லியல் துறை வல்லுநர் சாந்தலிங்கம் கூறுகையில், ‘‘குடவரை கோயில் என்பது இயற்கையான பாறைகளை குடைந்து கட்டக்கூடிய ஒரு மரபு.  இது கிபி 7ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் பல்லவ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட  குடவரை கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் செவல்பட்டி, மூவரை வென்றான், திருத்தங்கல், பாறைக்குளம் ஆகிய  4  இடங்களில் மட்டுமே குடவரை கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கோயில் முற்றிலும் சுண்ணாம்புக்கல் பாறையை குடைந்து  உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை காண முடியாத அளவிற்கு இரண்டு திருச்சுற்றுகள் கொண்ட ஒரு கருவறை, ஒரு அர்த்தமண்டபம், அர்த்த மண்டபத்தில்  இருந்து ஒரு திருச்சுற்று, அதற்கடுத்து ஒரு மகா மண்டபம், மகா மண்டபத்தில் இருந்து ஒரு திருச்சுற்று என்ற அமைப்பில் உருவாக்கி உள்ளனர்.

மிகவும் அரிதான ஒரு கட்டுமானமாக உள்ளது. கருவறையில் என்ன உருவம் இருந்தது என்று தெரியவில்லை.  ஆண்டி கோலத்தில் முருகன் சிலை  இருந்ததாகவும், பிற்காலத்தில்  அது திருடு போனதாகவும் கூறப்படுகிறது. தற்போது நாக உருவத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். 1200  வருடங்களுக்கு முன் கிபி 8ம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்கள்  காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதை சீரமைத்து  பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக மாற்றப்படும்’’ என்றார்.



Tags : cave temple ,Sivakasi ,Cave Temple: Set ,Sivakasi Discovery , 1,200 years , Sivakasi, Discovery , Temple,limestone
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...