தூர்வாராததால் கால்வாய்களில் நீர் திறந்தும் பலனில்லை கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல்: நடவுப்பணிகளை தொடங்க விவசாயிகள் தயக்கம்

நெல்லை: நெல்லை கால்வாயில் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாராததால் கடைமடை வரை தண்ணீர்  செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். பாபநாசம் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நெல்லை, கோடகன்,  பாளையங்கால்வாய், நதியுண்ணி கால்வாய், ஊர்மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும்.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பலன் பெறும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில்  எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டித் தீர்த்த மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 100  அடியை கடந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி கால்வாய்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது.  பாளையங்கால்வாய்க்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.

அதே நேரத்தில் நெல்லை கால்வாய் உள்ளிட்ட பிற கால்வாய்களில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இருப்பினும் தண்ணீர் திறப்பதற்கு முன்  கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. கால்வாய் வழிநெடுக கட்டிட கழிவுகள், மண் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே நிறைந்து  காணப்படுகின்றன. இதன் காரணமாக கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல்  ஏற்பட்டுள்ளது. தற்போது அசுத்த நீராக வருவதால் வழியிலுள்ள  குளங்களுக்கு திருப்பி விடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தடைகளை தாண்டி வரும் தண்ணீர் எந்தளவுக்கு  பாசனத்திற்கு பயன்படும் என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது. இதன் காரணமாக சில விவசாயிகள் நடவுப் பணிகளை தொடங்க தயக்கம்  காட்டுகின்றனர். மேலும் தற்போது வரை தண்ணீர் முழுமையாக வராத பாளையங்கால்வாயிலாவது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறையினர்  மேற்கொள்ள  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories:

>