ஆம்பூர் அருகே தொடர் மழையால் 500 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சி

ஆம்பூர்: ஆம்பூர் அருகே 500 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சி பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.ஆம்பூர் அருகே  அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது காட்டுவெங்கடாபுரம். இந்த ஊருக்கு மேற்கே ஆந்திர மாநிலத்தின் கவுண்டன்யா  வனவிலங்குகள் சரணாலயம் காப்பு காடுகளை ஒட்டி மாதகடப்பா காப்புக் காடுகள் உள்ளது. மாதகடப்பா காப்புக் காடுகள் மற்றும் ஆந்திர  வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநில வனப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அதேபோல் தமிழக  வனப்பகுதிகளில் மாதகடப்பா பகுதியில் துருகம் ஏரி, தாமரை குளம், ஏரி மற்றும் முனியப்பன் ஏரிகள் இப்போது நிரம்பி வருகின்றன.

இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பி மாத கடப்பா மலையின் 500 அடி உயரத்திலிருந்து தண்ணீர் குதித்து வழிந்தோடி வருகிறது. அடர்ந்த காட்டுப்  பகுதியில் பல்வேறு நீர்வீழ்ச்சிகள் இங்கு ஒன்று சேர்ந்து உயரத்திலிருந்து வெள்ளி உருக்கி ஊற்றியதுபோல் வெள்ளம் அருவியாய் விழுவது  கண்கொள்ளா காட்சியாக உள்ளது.அதேபோல் அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள மத்தூர்கொல்லை பகுதியில் நந்தி சுனை நீர்வீழ்ச்சி, குதிரைப்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் குரங்குப்பாறை  நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆம்பூர் வனச்சரகத்தில் மேற்கு பகுதியில் இப்போது பல்வேறு நீர்வீழ்ச்சிகள்  உருவாகியிருக்கின்றன.அடர்ந்த வனப்பகுதிகள் என்பதாலும், அரியவகை வனவிலங்குகள் வாழும் வசிப்பிடங்களாய் இருப்பதாலும் பாதுகாக்கப்பட்ட இந்த காப்பு காடுகள்  பகுதிக்குள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>