கொரோனாவால் திசை மாறியது வாழ்க்கை அமெரிக்க கப்பலில் பணியாற்றியவர் மதுரையில் கரும்பு ஜூஸ் விற்கிறார்

மதுரை: அமெரிக்க கப்பலில் பணியாற்றியவர் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து, தற்போது மதுரையில் கரும்புச்சாறு கடை நடத்தி வருகிறார்.மதுரை, புதூர், சூர்யா நகரை சேர்ந்தவர் சரவணன் (42). மனைவி நிஷாந்தி. ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் 1995ம் ஆண்டு டிப்ளமோ கேட்டரிங்  படிப்பை முடித்து, ஓமன், கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றி உள்ளார். 2010ல் அமெரிக்கா சென்றவர், அங்குள்ள தனியார் சொகுசு  கப்பலில் 10 ஆண்டுகள் சமையல் கலைஞராக பணியாற்றி உலகம் முழுவதும் சுற்றியுள்ளார். இந்திய மதிப்பில் மாதம் ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்  வாங்கியுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் விடுமுறையில் மதுரை வந்தார். மார்ச் 31ம் தேதி அமெரிக்கா செல்ல அனுமதி பெற்றிருந்தார். கொரோனாவால் இந்தியாவில்  மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்ல முடியவில்லை. அமெரிக்காவிலும்  கொரோனா உச்சத்தில் இருந்ததால், கப்பல் போக்குவரத்து முடங்கியது. இவருடன் பணியாற்றிய 1,500 பேரும் திரும்பி அனுப்பப்பட்டனர். இதனால்  வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வந்தார். அப்போது மனைவி நிஷாந்தியின் தோழி வழங்கிய ஆலோசனையின்பேரில், சரக்கு வாகனத்தில் நகரும்  கரும்புச்சாறு கடை நடத்தி வருகிறார்.

சரவணன் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் வேலை பறிபோனதும், வாழ்வாதாரமிழந்து சிரமப்பட்டேன். அப்போதுதான் நகரும் கரும்புச்சாறு கடை  நடத்தலாமென முடிவெடுத்தோம். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு வாங்குவதோடு, ஐஸ் கட்டி இல்லாமல், பிரிட்ஜில் வைக்கப்பட்ட  கரும்பில் இருந்து ஜூஸ் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறேன். எலுமிச்சை,  நாட்டுச்சர்க்கரை, புதினா, இஞ்சி, மிளகு  உள்ளிட்டவற்றை சேர்த்து தருவதால், உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது. மனைவி கரும்பின் தோல் சீவி, துண்டுதுண்டாக வெட்டி கொடுப்பார்.  லட்சக்கணக்கில் சம்பாதித்த நான், தற்போது தளராத உழைப்பால் ஓரளவுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டு, மனைவி, குழந்தையுடன்  மகிழ்ச்சியாக உள்ளேன்.  கொரோனாவால் வேலையிழந்த யாரும் வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ண வேண்டாம். தன்னம்பிக்கையுடன்  செயலாற்றினால், வருவாய் ஈட்டலாம்’’ என்றார்.

Related Stories: