×

கூடலூர் அருகே பரபரப்பு கிணற்றில் விழுந்த இளம்பெண் பலி; காப்பாற்ற முயன்ற 2 பேரும் சாவு

கூடலூர்:  கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற உறவினர்கள் 2 பேரும் கிணற்றில் குதித்தனர். இதில் இளம்பெண் உட்பட 3  பேரும் பலியாகினர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலாவில் உள்ள வட மூலை கிராமத்தை சேர்ந்தவர் ரூபி (22). இவர் அந்த கிராமத்தை ஒட்டி  வனப்பகுதிக்கு விறகு எடுக்க சென்றார். அந்த வனப்பகுதியில் வனத்துறை  தேவைக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட 100 அடி  ஆழ கிணறு ஒன்று உள்ளது.இந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்தது. அந்த கிணற்று பக்கம் ரூபி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக  ரூபி அந்த கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் உடனடியாக ரூபியின் உறவினர்களுக்கு தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து ரூபின் சகோதரர் தமிழழகன் (24), உறவினர் முரளி ஆகிேயார் அங்கு வந்தனர். அவர்கள் ரூபியை காப்பாற்ற  முயன்றனர்.  இதற்காக அவர்கள் 2 பேரும் கிணற்றுக்குள் குதித்தனர். ஆனால் அவர்களால் ரூபியை காப்பாற்ற முடியவில்லை. அவர்களாலும்  கிணற்று நீரில் இருந்து வெளியேற முடியவில்லை.

இதனால் 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். இது குறித்து கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள்  சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து ரூபி, தமிழழகன், முரளி ஆகிய 3 பேரின் சடலங்களையும் மீட்டனர். விபத்து நடந்த கிணறு பாழடைந்த கிணறு என  கூறப்படுகிறது. இந்த கிணற்றுக்குள் சமீபத்தில் பெய்த மழை தண்ணீர் புகுந்து சேறு அதிக அளவில் இருந்ததாக தெரிகிறது.எனவேதான் ரூபியை  காப்பாற்ற முயன்றவர்களும் பலியானதாக தெரிகிறது. இது குறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. திராவிடமணி அங்கு சென்று மீட்பு பணிகள் குறித்து பார்வையிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Death ,Teenager ,Kudalur ,Cuddalore Teenager , commotion ,Cuddalore, falling, Death ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...