×

கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கட்டுமான பணிகள் பாதிப்பு

பவானி:   பவானி ஆற்றில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்த மழை நீர் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின்  முதன்மை நீரேற்று நிலைய கட்டுமான பணிகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பவானி, ஆப்பக்கூடல், அத்தாணி, கோபி, சத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மழைநீர் வடிகால்கள் மூலம் பவானி ஆற்றில் வந்து கலந்தது. இதன் காரணமாக, பவானி  காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 166 கன அடியாக இருந்த உபரிநீர் வரத்து, நேற்று அதிகாலை விநாடிக்கு 2,200 கன  அடியாக அதிகரித்தது.  இதனால், அணைக்கட்டு நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றுக்குப் பெருக்கெடுத்தது.

  மேலும், காளிங்கராயன் அணைக்குக் கீழே கட்டப்பட்டு வரும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலையத்தின் கட்டுமானப்  பணி நடைபெற்று வரும் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தின் போக்கைக் கருத்தில் கொண்டு கட்டுமானப்  பணி நடக்கும் பகுதியைச் சுற்றிலும் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு, தண்ணீர் புகாத வகையில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அதிகாலை நேரத்தில் வெள்ளநீர் பெருக்கு ஏற்பட்டதால், கட்டுமானப் பணி நடைபெறும் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து தேங்கியுள்ளது.  இதையடுத்து 3 ராட்சத மோட்டார்கள் பொருத்தி, தேங்கிய தண்ணீரை முற்றிலும் வெளியேற்றும் பணி மும்முரமாக நடந்தது. இதனைத் தொடர்ந்து,  மீண்டும் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.



Tags : floods ,Bhavani River ,Bhavani , Bhavani, river ,floods ,work, Fig-Avinashi ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை