×

கீழடி அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்: ஆறாம் கட்ட ஆய்வு விரைவில் நிறைவு

திருப்புவனம்: கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் நிறைவு பெற இருப்பதால், கண்டறியப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி  துவங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில், ரூ.40 லட்சம் செலவில் 6ம் கட்ட அகழாய்வு  பணி கடந்த பிப். 19ம் தேதி துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் பணிகள் நடைபெறவில்லை. மே மாத இறுதியில்  பணிகள் தொடங்கின. கீழடியில் 18 குழிகளும், கொந்தகையில் 7 குழிகளும், மணலூரில் 5 குழிகளும், அகரத்தில் 12 குழிகளும் தோண்டப்பட்டு பணிகள்  நடந்து வருகின்றன.

இதில் எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயம், உறைகிணறு, உலைகலன், செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், கருப்பு, சிவப்பு  பானைகள், இணைப்பு குழாயாக பயன்படுத்தப்பட்ட பானைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. அகழாய்வு பணிகள் செப். 15ம் தேதிக்குள் முடிக்கப்பட  உள்ள நிலையில், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், அதனை எடுத்த குழிகள் உள்ளிட்டவைகளை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல்  துறையினர் ஈடுபட்டுள்ளனர்.அகழாய்வு குழிகள் அமைந்துள்ள இடங்கள், பொருட்கள் குறித்த வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கீழடி, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வு குழிகளை ஹெலிகாம் மூலம் வீடியோ  மற்றும் புகைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன.

Tags : Excavation, material ,documentation ,soon
× RELATED ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக...