×

கோபியில் பெய்த கனமழைக்கு பாசன வாய்க்கால் ஷட்டர் உடைப்பு

கோபி:   கோபி சுற்றுப்புற  பகுதியில் பெய்த கனமழையால் பாசன வாய்க்கால் ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விவசாய நிலங்களுக்குள்  புகுந்தது. ஈரோடு மாவட்டம் கோபி  மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஏற்கெனவே  கீழ்பவானி பாசன வாய்க்காலில்  பாசனத்திற்காக தண்ணீர் முழு அளவில் திறந்து  விடப்பட்டுள்ள நிலையில், மழை நீரும் சேர்ந்ததால் வாய்க்காலில் அதிகளவு  தண்ணீர் சென்றது.  இதனால் கிளை வாய்க்கால்  இரும்பு சட்டர்கள் பல இடங்களில் உடைந்தது. செம்மாண்டாம்பாளையம்  என்ற இடத்தில் கல்வி கிளை  வாய்க்காலுக்காக பொருத்தப்பட்ட ஷட்டர் ஏற்கனவே  பழுதடைந்த நிலையில் இருந்ததாலும், தண்ணீரின் அளவு அதிகரித்ததாலும்  முழுமையாக  சேதமடைந்தது.

இதனால் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் சென்றதால், பல  இடங்களில் கரையை உடைத்துக்கொண்டு தண்ணீர் வெளியேறி,  அருகில் உள்ள விவசாய  நிலங்களுக்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொதுப்பணித்துறை  அதிகாரிகள் உடைந்த இரும்பு ஷட்டரை மூங்கில் கொண்டு தடுப்பு  ஏற்படுத்தி அடைத்துள்ளனர். ஆனால்  அந்த தடுப்பையும் தாண்டி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில்  விவசாயம் செய்ய  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடைந்த ஷட்டர்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Gopi , heavy rain , Gopi, Irrigation ,shutter ,breakage
× RELATED மணப்பாறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..!!