×

ஒரே வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதா?: கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக சித்தரித்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி..!!

சென்னை: ஒரே வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீதான குண்டர் சட்ட வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் இந்த கேள்வி எழுப்பியுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக சித்தரித்த புகாரின் பேரில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

 இவர்களில் சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சுரேந்திரனின் மனைவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அவர் தம் மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவும், கல்வி அறிவின்மை, அறியாமையை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வெளியிட்ட தனது கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், குண்டர் சட்டத்தை பயன்படுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவசரகதியில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது சட்டப்படியும், இயற்கை நீதிக்கும் முரணானது எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரே ஒரு வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதா என்று கேள்வி எழுப்பி, மனு குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

Tags : someone ,Government ,TN , karupar kootam , youtube , Surendar,arrested ,gundas ,highcourt
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...