×

கொரோனாவில் இருந்து மீண்டவரின் வீட்டுக்கும் தகர தடுப்பு: நகராட்சி ஊழியர்கள் அடாவடி

தாம்பரம்: கொரோனாவில் இருந்து முழுவதும் குணமடைந்தவரின் வீட்டுக்கும் நகராட்சி ஊழியர்கள் தகர தடுப்பு அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் ஹேம்குமார் (50). வங்கி ஊழியரான இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, நேற்று முன்தினம் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து யாரும் வெளியே செல்லாதவாறு தகரத்தால் தடுப்பு அமைக்க முயற்சித்தனர். இதற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஹேம்குமாரின் வீட்டின் வாசல் கதவை, தகரம் கொண்டு முழுமையாக அடக்க முயற்சி செய்தனர். இதற்கு ஹேம்குமார் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, கதவை முழுமையாக அடைத்தால் அத்தியாவசிய தேவைக்கு எவ்வாறு வெளியே செல்ல முடியும், கொரோனா நோயில் இருந்து, முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் எதற்காக கதவை, தகரம் கொண்டு அடைகிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை பொருட்படுத்தாத நகராட்சி அதிகாரிகள் ஹேம்குமாரின் வீட்டை தகரம் கொண்டு முழுமையாக அடைத்துவிட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தை அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த அடாவடி செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்ததால், நேற்று மதியம் ஹேம்குமார் வீட்டிற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் தகரத்தை முழுமையாக அப்புறப்படுத்தி சென்றனர். இதுகுறித்து ஹேம்குமாரின் மனைவி கூறுகையில், ‘‘எனது கணவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருந்தபோது, நகராட்சி அதிகாரிகள் எங்கள் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பிற்கு  தகரம் அடிக்கவில்லை.

என் கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய பின்னர், வீட்டின் வாசல் கதவை தகரம் அடித்து முழுமையாக மூடினர். எங்கள் வீட்டில் வயதானவர்கள் உட்பட மொத்தம் 6 பேர் உள்ளோம், இவ்வாறு கதவை முழுமையாக மூடினால், அவசர தேவைக்கு எங்களால் எப்படி வெளியே செல்ல முடியும். எங்கள் வீடு முதல் தளத்தில் உள்ளதால் ஜன்னல் வழியாக கூட அத்தியாவசிய பொருட்களை வாங்கமுடியாத நிலை உள்ளது. எனவே கதவை அடக்க வேண்டாம் என கூறியும், அதிகாரிகள் அதை காதில் வாங்காமல் முழுமையாக தகரத்தால் மூடி விட்டு சென்றனர். பின்னர் அவர்களே வந்து தகரத்தை முழுமையாக அகற்றி விட்டு சென்றனர். இது போன்ற செயலை இதுவரை எங்கும் நாங்கள் பார்த்ததில்லை. இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக கூட நாங்கள் கேள்விப்பட்டது இல்லை,’’ என்றார்.

Tags : Adavati ,home ,survivor ,Corona , Corona, to the home of the rescuer, tin prevention, municipal employees, Adavati
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...