திமுக, காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி.நட்டாவுக்கு உரிமை இல்லை: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜ மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியதலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருப்பது என்பது குறித்து ஆதாரத்துடன் கூறாமல் குற்றச்சாட்டை பொத்தாம் பொதுவாக சுமத்தியிருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதால் தான் பாஜவுக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு உணர்ச்சி கொந்தளிப்பான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே பாஜக செல்வாக்கு இழந்த முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஜே.பி. நட்டா, ஆத்திரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை-2020 ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடப்பட்ட நிலையில் அதை தமிழில் வெளியிட வேண்டும் என்பதற்குக் கூட, நீதிமன்றத்தில் போராடி உரிமையை பெற வேண்டியிருக்கிறது. சூழலியல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்பதற்கு அதைத் தமிழில் வெளியிட வேண்டும் என்கிற குறைந்தபட்ச நியாயமான அணுகுமுறை கூட பாஜ அரசிடம் இல்லை. எனவே, தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற கட்சியாக பாஜ இருக்கும் நிலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>