×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு டிரான்ஸ்பார்மர் மீது வேன் மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, டிரான்ஸ்பார்மர் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் தனியார் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பணியாளர்கள், வேன் மூலம் வீட்டில் இருந்து அழைத்து வந்து, மீண்டும் கொண்டு செல்லப்படுகின்றனர்.

 இந்நிலையில், குன்றத்தூர் ஒன்றியம், ஒரத்தூர் பகுதியில் இருந்து 3 பெண்கள் உள்பட 5 பேர், நேற்று முன்தினம் மாலை வேலைக்கு வேனில் புறப்பட்டனர். வேன் ஒரத்தூர் - படப்பை சாலை வழியாக, தொழிற்சாலை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆரம்பாக்கம் கூட்டு சாலை அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பயங்கரமாக மோதியது. இதனால், டிரான்ஸ்பார்மரில் இருந்த இணைப்புகள் வெடித்து, மின்வயர்கள் எரிந்தன. இதில், வேனில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் லேசான காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்.

புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர். இதற்கிடையில், விபத்து ஏற்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து, நீலமங்கலம் கிராமத்துக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது. இந்த திடீர் விபத்தால், நேற்று முன்தினம் மாலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள், வேறு ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து, நீலமங்கலம் கிராமத்துக்கு மினிவினியோகம் செய்தனர். ஆனால், போதிய மின்சாரம் இல்லாமலும், குறைந்த மின் அழுத்ததாலும், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். அதே நேரத்தில், நேற்று மாலை வரை, விபத்தில் பழுதான டிரான்ஸ்பார்மரை, அதிகாரிகள் சீரமைக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Tags : Sriperumbudur ,Van ,transformer , Sriperumbudur, Transformer, van collision, accident, fortunately 6 people, survived
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...