×

4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி மையம்: திறக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே அங்கன்வாடி மையம் உள்ளது. இதனால், உடனே திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சிறுவர்-சிறுமிகள் படிப்பதற்காக அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 2015-2016ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அப்போதைய எம்எல்ஏ சிஎச்.சேகர் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் நிதியை ஒதுக்கினார். அதன்பிறகு, கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதில், இன்னும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. மேலும், இரவு நேரத்தில் குடிமகன்களின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, இந்த புதிய அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

இதை ஏன் இன்னும் திறக்கவில்லை என அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் மழுப்பலான பதிலையே கூறுகிறார்கள். மேலும், இந்த அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் குடிநீர் வசதியோ அல்லது மின்சாரம் வசதியோ இதுவரை அமைத்துத்தரவில்லை. முட்புதர்கள் சூழ்ந்துள்ளதால், குடிமகன்கள் புதிய அங்கன்வாடி மையத்தில் பாராக பயன்படுத்தி வருகிறார்கள். புதர் மண்டி காட்சியளிக்கிறது. எனவே, கட்டி முடிக்கப்பட்டு காட்சிப்பொருளாக உள்ள அங்கன்வாடி மையத்தை உடனே திறக்க வேண்டும்” என கூறினர்.

Tags : Anganwadi Center , 4 year, locked, Anganwadi Center, request to open
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்