×

மகாராஷ்டிராவில் நடந்த சோகம் கட்டிட விபத்து பலி 12 ஆக உயர்வு: பில்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு

ராய்கட்: மகாராஷ்டிராவில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 12 பேர் பலியாகினர். மேலும், 19 பேரை காணவில்லை. மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டம், மகாத் தாலுகாவில் உள்ள கஜல்புரா பகுதியில் நேற்று முன்தினம் மாலை தாரேக் கார்டன் என்ற 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில்  40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் உள்ளிட்டோர் பல்வேறு கருவிகளின் உதவியோடு விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மோப்பம் பிடிக்க மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. மீட்பு படையினர் விடிய விடிய மேற்கொண்ட மீட்பு பணியின் போது நேற்று காலை 12 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் 5 பேர் ஆண்கள் 5 பேர் பெண்கள் ஆவர். மற்ற 2 பேர் குறித்த விவரம் தெரியவில்லை. தொடர்ந்து மீட்புபணி நடைபெறுகிறது. நேற்று காலை வரை 78 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 19 பேரை காணவில்லை. அவர்களை மீட்புப்படை தேடி வருகிறது. விபத்து தொடர்பாக கட்டிடத்தை கட்டிய பாரூக் காசி, இன்ஜினியர் கவுரவ் ஷா உட்பட 5 பேர் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

* பிரதமர், ராகுல் வேதனை
விபத்து குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `ராய்கட்டில் 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவம் என்னை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `விபத்து குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Tags : Maharashtra , Maharashtra, tragedy, building accident, 12 killed, rise: Builder, 5, case
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி