×

திருச்சியில் 2வது நாளாக பெய்தது மழை நீரில் மிதக்கும் ஜி கார்னர் சந்தை: வியாபாரிகள் கடும் அவதி

திருச்சி: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 2ம் நாளாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. புதுக்கோட்டை, விராலிமலை, அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரத்துக்கு மழை நீடித்தது. இதேபோல் பெரம்பலூர், செட்டிக்குளம் மற்றும் அரியலூர் பகுதிகளிலும் 2வது நாளாக மழை கொட்டியது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் காலை முதல் கடும் வெயில் அடித்து வந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் கன மழை பெய்து, சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. திருச்சியில் நேற்றிரவு 8.30 மணியிலிருந்து காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

காந்தி மார்க்கெட் தற்காலிகமாக இயங்கி வரும் பொன்மலை ஜி.கார்னர் மைதானம் தாழ்வான பகுதி என்பதால் அங்கு குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால் காய்கறிகள் நீரில் மிதந்தது. வியாபாரிகள் காய்கறிகளை விற்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதனால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதுபற்றி தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு கூறியதாவது: மழையால் மார்க்கெட் வெள்ளத்தில் மிதக்கிறது. வியாபாரிகள் அவதிப்படுவது தெரிந்தும் மாவட்ட நிர்வாகம் ஜி.கார்னர் மைதானத்தில் ஷெட் அமைக்கவில்லை. மண் அடித்து மேடுபடுத்தவில்லை.

இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்குவதால் காய்கறிகள் அழுகி வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. மார்க்கெட்டில் கழிவறை வசதி இல்லை. டீக்கடை வைக்க அனுமதி இல்லை. இதுபற்றியும், மார்க்கெட்டை இடமாற்றக்கோரியும், வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் 10க்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காந்தி மார்க்கெட்டை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். இரவில் மொத்த வியாபாரத்தையும், பகலில் சில்லறை வியாபாரத்தையும் கூட்டுக்குழு அமைத்து செயல்பட தயாராக உள்ளோம். இல்லை என்றால் திருச்சி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : Traders ,Trichy , G Corner Market, floats ,2nd day , Trichy, Traders suffer
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...