கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கொரோனா தொற்றால் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ள நிலையில் சிவகுமார் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ட்விட்டரில், எனக்குக் காய்ச்சலும், இருமலும் லேசாக இருந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். இருப்பினும், மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். உங்கள் ஆசிகளுடன் விரைவில் குணமடைந்து திரும்புவேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

58 வயதான டி.கே.சிவகுமார் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சலும், இருமலும், முதுகுவலியும் சிவகுமாருக்கு இருந்தது. உடனடியாகக் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி.கே. சிவகுமார் விரைவாக குணமடைய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>