×

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - பாதுகாப்பு குறித்து தலைமை செயலர் நேரில் ஆய்வு

சென்னை:  தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் சென்னை கலைவாணர் அரங்கில் தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். சட்டப்பேரவை விதியின்படி வருடத்திற்கு இரண்டு முறை, 6 மாத இடைவெளியில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்படும். பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு, ஜனவரியில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா அச்சம் இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில், கூட்டம் நடத்தும் அளவிற்கு போதிய இடவசதி இல்லை. எனவே சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து சட்டப்பேரவை செயலகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவை தலைவர் தனபால், கலைவாணர் அரங்கை நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் தலைமை செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் ஆய்வு செய்துள்ளனர்.

உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான இருக்கை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் பேரவை கூட்டப்படும் நாள் குறித்து ஒரு வாரத்தில் இறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளததாகவும் தெரிவித்துள்ளனர்.




Tags : Chief Secretary ,meeting ,Legislature ,Chennai Kalaivanar Arena - Interview , Chennai Kalaivanar Arena, Meeting of the Legislature, Chief Secretary
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...