×

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு 1000 ரூபாய் வழங்கிய தலைமை ஆசிரியரின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ள தலைமையாசிரியரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செஞ்சி அருகே கணக்கன் குப்பத்தில் இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் சுமார் 130 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் தலைமையாசிரியரான இஸ்மாயில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்கும் பெற்றோருக்கு தனது சொந்த பணத்திலிருந்து எவர் சில்வர் குடத்துடன், ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பரிசாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் தனியார் பள்ளிகளின் மீதுள்ள மோகத்தை தவிர்த்து, அரசு பள்ளிகளில் குழந்தைகளை அதிகளவில் சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்பதே தலைமையாசிரியர் இஸ்மாயிலின் கோரிக்கையாகும். மேலும் இதற்காக குலுக்கல் முறையில் 3 மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கக்காசுகளை வழங்க உள்ளதாகவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக துண்டு பிரசுரம் ஒன்றையும் அவர் பொதுமக்களிடையே வழங்கி வருகிறார். அரசு பள்ளி ஆசிரியரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Tags : headmaster ,parents ,government school ,children ,Villupuram ,Villupuram A ,Government school Headmaster , Government School,Headmaster ,Villupuram ,Children admission
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...