கலிபோர்னியாவில் 10 நாட்களாக படரும் காட்டுத்தீ உலகத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளது!: சூழலியல் ஆய்வாளர்கள்..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 10 நாட்களாக எரிந்து வரும் பெரும் காட்டுத்தீ உலகத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளதாக சூழலியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய தீ விபத்தாக இது பதிவாகியுள்ளது. எங்கு பார்ப்பினும் அகோர பசியுடன் தனது நாவுகளை நீட்டுகின்ற பெரு நெருப்பு. சூரியனுக்கு அருகில் செல்ல முயன்ற சிறு பறவையின் கதையாய்  பல ஆண்டுகால ராட்சத மரங்கள் ஆங்காங்கே பொசுங்கி சாய்கின்றன. கடந்த 10 நாட்களாக இதே கதைதான் கலிபோர்னியாவில் தொடர்கிறது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் காட்டுத்தீ என்றாலே அது கலிபோர்னியா தான். 3 கோடியே 30 லட்சம் ஏக்கரில் பரந்து விரிந்த வனப்பரப்பு உள்ள பகுதி தான் கலிபோர்னியா.

இங்கு காட்டுத்தீ ஏற்படுத்து என்பது புதிதல்ல. ஆண்டுக்கு குறைந்தது 2,000 இடங்களிலாவது காட்டுத்தீ ஏற்பட்டுவிடும். ஆனால் தற்போது 3 இடங்களில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ, பிரேசிலில் இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயை நினைவுபடுத்தி செல்கிறது. கலிபோர்னியாவின் வடக்கில் கடந்த 15 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 630 ஏக்கர் வனங்களை காட்டுத்தீ கபளீகரம் செய்துவிட்டது. நாப்பா மற்றும் சாண்டா கிளாரா ஆகிய இடங்களில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 965 ஏக்கர் வனத்தில் சாம்பல் மட்டுமே மிச்சமிருக்கிறது. இவ்விரு இடங்களிலும் ஏற்பட்டுள்ள பெரும் தீ, அமெரிக்க வரலாற்றில் 2, 3வது மிகப்பெரிய காட்டுத்தீயாக பதிவாகியுள்ளது. மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காட்டை நெருப்பு தின்று தீர்த்துள்ளது. புதர்கள், புற்கள் மற்றும் சிறு மரங்களை காட்டுத்தீ எரிப்பது என்பது இயல்பு தான். ஆனால் காட்டுத்தீக்கு சவால் விடும் ஆற்றல் படைத்த 12 பேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் அளவுக்கு பருமன் கொண்ட கலிபோர்னியா சிவப்பு மரங்கள் மற்றும் ஜோஸ்வா மரங்கள் அடியோடு சாய்ந்து வருவது காலநிலை மாற்றத்தின் ஆபத்தான சமிக்ஞை என்று சூழலியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் கலிபோர்னியாவில் 10 நாட்களாக படரும் காட்டுத்தீ உலகத்திற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என்று சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆங்காங்கே மழை பெய்தாலும் தீ அணைந்தபாடில்லை. மாறாக மின்னல் மின்னியதில் 585 இடங்களில் தீப்பிடித்து அது காட்டுத்தீயாக மாறியிருப்பது அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் வடபகுதிகளில் கால் பகுதி அழிந்துவிட்டது. இந்த தீயை அணைக்கும் முயற்சியில் 13 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 5 லட்சம் பேரை வெளியேற்றும் நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் இதுவரை 7 பேர் இறந்துவிட்டனர். 700 வீடுகள் நெருப்புக்கு இறையாகிவிட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கலிபோர்னியா காட்டுத்தீயை மிகப்பெரிய பேராபத்தாக அறிவித்துவிட்டார். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார். இதனிடையே காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகள், பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் உடனே தங்கள் இடங்களை விட்டு வெளியேற தயாராக இருக்குமாறு தனது மாகாண மக்களுக்கு கலிபோர்னியா ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>