×

பேராவூரணியில் தற்காலிகமாக செயல்படும் கல்லணை கால்வாய் கோட்ட அலுவலகம் ஆயிங்குடிக்கு மாற்ற வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

அறந்தாங்கி: கட்டிடம் சேதமடைந்ததால், பேராவூரணிக்கு மாற்றப்பட்ட கல்லணை கால்வாய் கோட்ட ஆயிங்குடி பிரிவு அலுவலகத்தை  ஆயிங்குடியிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக காவிரி நீர் உள்ளது. காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மூலம்  இப்பகுதிக்கு காவிரி நீர் செல்கிறது. இதில் கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியும் பாசன வசதி  பெறுகிறது.கல்லணைக் கால்வாய் ஆயிங்குடி பிரிவில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த (தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி வட்டத்தின் சில ஏரிகள்  உள்பட) 58 ஏரிகள் மூலமும், நாகுடி பிரிவில் 110 ஏரிகள் மூலமும் காவிரி நீர் பாசனம் நடைபெற்று வருகிறது. ஏரிகளை பராமரிக்கவும், தண்ணீர் வரும் காலங்களில் நீரை பகிர்ந்தளிக்கவும், கரைகளில் சேதம் ஏற்படாமல் தவிக்கும் வகையிலும், 1938ம் ஆண்டு  ஆயிங்குடியிலும், நாகுடியிலும் உதவிப் பொறியாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இதில் ஆயிங்குடி பிரிவு அலுவலகம் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன் பழுதானது. பொதுப்பணித்துறையினர் பழுதான கட்டிடத்தை சீரமைக்காமல், ஆயிங்குடி பிரிவு அலுவலகத்தை பேராவூரணிக்கு  மாற்றிவிட்டனர்.

ஆயிங்குடியில் சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கல்லணைக் கால்வாயில்  தண்ணீர் வரும் காலங்களில் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் தேவை என்றாலோ, தங்கள் பகுதி ஏரி குறித்து ஏதேனும் மனு கொடுக்க  வேண்டும் என்றாலோ, அவர்கள் பல கி.மீ தூரத்தில் உள்ள பேராவூரணிக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் தண்ணீர் வரும் காலங்களில் உதவிப்பொறியாளர் தண்ணீர் மற்றும் கரைகளின் பாதுகாப்பு குறித்து தொடர் ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால்,  பேராவூரணியில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஆயிங்குடி பகுதியில் முகாமிட கூட அலுவலகம் இல்லாமல் ஆற்றின் கரைகளில் ஓய்வு எடுக்க  வேண்டிய அவலம் உள்ளது. எனவே ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்த 58 ஏரிகளின் ஆயக்கட்டு தாரர்களின் நலனை கருத்தில் கொண்டு  பொதுப்பணித்துறை கல்லணைக் கால்வாய் கோட்ட ஆயிங்குடி பிரிவு அலுவலகத்திற்கு ஆயிங்குடியில் புதிதாக கட்டிடம் கட்டி, அலுவலகத்தை  ஆயிங்குடியில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய கட்டிடம் கட்டப்படும் வரை ஆயிங்குடியில் உள்ளாட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில்  உள்ள கட்டிடங்களில் தற்காலிக அலுவலகத்தை அமைத்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தூர்வாருவதாக பல லட்சம் ஒதுக்கீடு
இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகி ராஜேந்திரன் கூறியது: கல்லணைக் கால்வாய் ஆயிங்குடி பிரிவு அலுவலகம் 1938 ஆம் ஆண்டு கட்டப்பட்டு  இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தின் இருந்து 58 ஏரிகளுக்கு தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அலுவலகம் பழுது என காரணம்  காட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு ஆயிங்குடி பிரிவு அலுவலகம் ஆயிங்குடிக்கு மாற்றப்பட்டது. நாகுடி பிரிவு அலுவலகத்திற்கு கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் பழுதடைந்த ஆயிங்குடி அலுவலகத்திற்கு பதிலாக புதிய அலுவலகம்  கட்டப்படவில்லை. ஆண்டுதோறும் கல்லணைக் கால்வாயை தூர்வாருகிறோம் என்ற பெயரில் பல லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கி, முறையாக  தூர்வாரப்படாத நிலையில், அது குறித்தும் ஆயிங்குடியில் அலுவலகம் இல்லாததால், புகார் தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர்  கூறினார்.

Tags : fort canal office ,Peravurani ,Peravurani Kallani Canal Divisional Office , Acting,Peravurani, Kallani,Divisional ,shifted ,Aingudi, Farmers ,demand
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு