×

பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் அருகே இயற்கை சாயம் தயாரிக்கும் அவுரிதொழிற்கூடம் கண்டுபிடிப்பு: நூறாண்டுகள் பழமை வாய்ந்தது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் அருகே நூற்றாண்டுப் பழமை வாய்ந்த இயற்கை சாயம் தயாரிக்கும் அவுரித் தொழிற்கூடம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நமது முன்னோர்கள் பல்வேறு வகையான இயற்கைச் சாயங்களை தாவரங்களின் உறுப்புகளான இலைகள், பூக்கள் அதன் பட்டைகள், வேர்கள்  ஆகியவற்றின் மூலமாக பல்வேறு வண்ணங்களை தயாரித்து துணிகளுக்கு சாயம் ஏற்றி வந்திருக்கிறார்கள். இதில் குறிப்பாக வண்ணங்களின் அரசன்  என்றழைக்கப்படும் அவுரிச் செடி சாயம் நமது நாட்டில் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு பயன்படுத்திய செடியின் பெயர் அவுரிச் செடி.  ஆங்கிலத்தில் ‘இண்டிகோ’ என்றும் இதனை அழைப்பர். இதன் இலைகளிலிருந்து இந்தச் சாயம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இந்த அவுரிச் செடி சாயத்துக்கு பெருமளவிற்கு மவுசும் தேவையும் இருந்திருக்கிறது.  பெருமளவில் துணிகளுக்குச் சாயம் ஏற்றத் தேவை இருந்ததால் இவற்றை வணிகப்பயிராக வளர்க்கத் தொடங்கினர்.அவற்றைக் கொண்டு சாயம் தயாரிப்பதற்கு ஏற்ற அவுரி சாயத் தொழிற் கூடங்களை விவசாயிகள் உருவாக்கியிருந்தார்கள். தற்போது செயற்கை  சாயத்திற்கு மாறியதும் இயற்கை சாயம் தயாரிக்கும் தொழில் கைவிடப்பட்டு விட்டது. முன்பு பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவுரிச்  செடி சாயம் தயாரிக்கும் தொட்டிகள் இருந்திருக்கிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டம் அய்யலூர் வரகுபாடி எல்லையில், ஒரேயொரு தொட்டிமட்டும்  பயன்பாடு இல்லாமல் தனியார் ஒருவர் நிலத்தில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது நூற்றாண்டு பழமையானது.

சுண்ணாம்புக் காரையால் உறுதியாகக் கட்டப்பட்டுள்ள இந்தத் தொட்டி 3 அடுக்குகளாக வெவ்வேறு உயரங்களில் இருக்கிறது. முதல்தொட்டி  உயரமாகவும் , இரண்டாம் தொட்டி சற்று கீழாகவும், கடைசித் தொட்டி அதற்கும் கீழாக அமைந்திருக்கிறது. முதல் தொட்டிக்கு அருகில் ஒரு கிணறு  ஒன்று உள்ளது. கிணற்றிலிருந்து நீர் இறைத்து முதல் தொட்டியில் சேமித்து வைத்திருக்கலாம். இரண்டாம் தொட்டியில் அவுரிச் செடி இலைகளை  தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அதிலிருந்து சாயத் தண்ணீரை மட்டும் மூன்றாம் தொட்டியில் சேகரித்து வந்திருக்கலாம். தொட்டியின் அடியில்  தங்கிய கூழ்ம நிலையில் உள்ள கசடுகளை மட்டும் பிரித்து எடுத்து அவற்றை காய்ச்சி நீர் ஆவியான பின் கிடைக்கின்ற சாயக் கூழினை ஆறவைத்து  கட்டியாக (வெல்லக்கட்டி, சோப்புக்கட்டி) போன்று தயாரித்து வந்துள்ளனர்.

பெரம்பலூர் நாரணமங்கலம், அரும்பாவூர்,வரகுப்பாடி, அய்யலூர் போன்ற பகுதிகளில் அவுரிக்காடு, அவுரித்தொட்டிக்காடு என்று அவுரி பயிரிட்ட  நிலங்களை அழைத்து வருகின்றனர். அக்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு மானாவாரி பகுதிகளில் அவுரிச் செடி சாகுபடி  நிகழ்ந்திருக்கிறது.இந்த அவுரிச் செடியானது ஒரு மூலிகைச் செடியாகவும் பயன்படுகிறது .இதன் இலைகள், பூ வேர்கள் ஆகியவை சித்த மருத்துவத்தில் பெருமளவில்  பயன்படுகிறது. தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இவை தேவைப்படுகிறது. இதன் மூலம் தற்போது தலைமுடிக்கு சாயம் ஏற்று  கின்ற மூலப் பொருளாகத் தேவைப்படுகிறது. அவுரி செடியானது, மானாவாரியில் குறைந்த நீரைக்கொண்டு வளர்வது. அவுரி பயிரிடவும், இயற்கை  சாயங்களை தயாரிக்கவும், அரசாங்கம் இளைஞர்களை ஊக்குவித்தால், பொருளாதாரமும் பெருகும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.



Tags : Ayyalur ,Natural Dye Manufacturing Factory ,Perambalur District ,Ayyalur Discovery , Perambalur , Ayyalur, making, Centuries ,old
× RELATED திறந்தவெளி கிணற்றில் ஆட்டோ பாய்ந்து டிரைவர், பயணி பலி: வடமதுரை அருகே சோகம்