×

சேதுபாவாசத்திரம் அருகே கஜாபுயலின்போது ஏரியில் வீசப்பட்ட தென்னைமர துண்டுகள்

* 2 ஆண்டுகளாகியும் அகற்றவில்லை
* பொதுப்பணித்துறை அலட்சியம்

சேதுபாவாசத்திரம்: கஜா புயல் தாக்கி இரண்டு ஆண்டுகளாகியும் சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏரிகளில் கொட்டிய தென்னைமர துண்டுகளை  அப்புறப்படுத்தாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ம் தேதி அதிகாலை கரை கடந்த கஜா புயல் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் சுமார் 1.50  லட்சம் தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது. அதுமட்டுமின்றி மா, பலா, தேக்கு, வேம்பு, பூவரசு, புளி என லட்சக்கணக்கான காட்டுமரங்களையும்,  ஆயிரக்கணக்கான வீடுகளையும் சூறையாடி சென்றது. புதிய தென்னங்கன்றுகள் நடுவதற்காக மிகுந்த போராட்டங்களுக்கு இடையே சாய்ந்த தென்னை  மரங்களை வெட்டி லாரிகள் மூலம் அப்புறபடுத்தினர். அவ்வாறு அப்புறபடுத்திய தென்னை மரங்களின் தூர் மற்றும் நுனி பகுதிகளை அப்புறப்படுத்தி  கொட்டுவதற்கு இடமின்றி வறண்டு கிடந்த ஏரிகளிலும், சாலை ஓரங்களிலும் தென்னை விவசாயிகள் கொட்டினர்.

கடந்தாண்டு நிரம்பிய ஏரிகளில்  அவை அனைத்தும் மிதக்கத்தொடங்கியது. இதனால் ஏரி தண்ணீர் முழுவதும் துர்நாற்றம் வீசியது. அப்போதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்  கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது ஏரிகள் வறண்டு கிடக்கும் நிலையிலும் அந்த மரங்கள் ஏரிகளில் அப்படியே கிடக்கிறது.  இந்த ஆண்டு பருவ மழை தொடங்கி ஏரிகள் நிரம்புவதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் தென்னை மர துண்டுகளை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Sethupavasathiram ,lake ,Gajapuyal , Coconut,lake , Gajapuyal ,Sethupavasathiram,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...