×

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடக்கம் கொரோனா வருவாய் இழப்பால் அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்: கடந்த காலத்தைவிட கூட்டம் அலைமோதல்

நெல்லை:  பிளஸ்1 மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வருவாய் இழந்து தவிக்கும்  பெற்றோர், தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல அரசு பள்ளிகளில் வழக்கத்தை விட கூட்டம்  அலைமோதி காணப்பட்டது. தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடப்பு புதிய கல்வியாண்டிற்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. கடந்த மார்ச்சில்  கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால், கடந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை கூட முழுமையாக நடத்த முடியாமல் கல்வி  நிறுவனங்கள் மூடப்பட்டன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்த முடியாததால் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.  அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் மற்றும் 20 சதவீத வருகைப் பதிவேடு உள்ளிட்டவைகளை கணக்கில்  கொண்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக பெற்றோர், மாணவர் தரப்பில் புகார்கள் எழுந்தன.  இதையடுத்து குறைகளை நிவர்த்தி செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கு பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கை அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளிலும்  நேற்று தொடங்கியது. மாணவர்களின் மதிப்பெண் மற்றும் விருப்ப அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆய்வு செய்து  சேர்க்கை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான மாணவ, மாணவிகள் அவர்கள் ஏற்கனவே 10ம் வகுப்பு படித்த மேல்நிலைப்பள்ளியிலேய பிளஸ் 1  படிப்பைத் தொடர விண்ணப்பித்து வருகின்றனர்.
உயர்நிலைப்பள்ளியி–்ல் படித்த மாணவர்கள் புதிய பள்ளிக்கு படையெடுத்து வருகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றி சேர்க்கை நடத்த  கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சேர்க்கை நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல பெற்றோர், வருவாய் இழந்து  தவிக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாததால் அரசு மேல்நிலைப்பள்ளி  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

நெல்லையில் டவுன் கல்லணை பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1  சேர்க்கைக்கு வழக்கத்தைவிட அதிக அளவில் மாணவ, மாணவிகள் கூட்டம் காணப்பட்டது. சில பள்ளிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடங்களை  விட கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனாலும் அரசு பள்ளிகளில் ஏற்கனவே பயின்ற மாணவர்களுக்கு  முன்னுரிமை அளித்து மற்ற இடங்களில் புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.பிளஸ்1 வகுப்பில் சேர அதிகமாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்புகளை திறக்க கல்வித்துறை  அனுமதி வழங்க வேண்டும் என பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Corona Parental ,government schools ,Crowd , Plus 1, Student , Corona ,Revenue , past
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...