×

தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

ராமேஸ்வரம்:  தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பினை வேட்டைத்தடுப்பு காவலர்கள் கடற்கரை மணலில் புதைத்தனர். ராமேஸ்வரம் அருகே பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதி தீவுகளுக்கிடையே டால்பின் மீன்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. மீனவர்கள்  படகில் செல்லும்போது இம்மீன்கள் படகினை தொடர்ந்து சென்று, கடல் நீருக்குள் அங்குமிங்கும் குதித்து மீனவர்களை உற்சாகப்படுத்தும். இந்த  டால்பின் வகை மீன்கள் உட்பட பல்வேறு வகையான அரியவகை கடல் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்குவது வாடிக்கையாக உள்ளது.

நேற்று தனுஷ்கோடி கடலோர பகுதியில் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. வாய் மற்றும் கண் பகுதியில் ரத்தக்காயத்துடன் இருந்த  டால்பின் 5 அடி நீளம், 50 கிலோ எடையில் இருந்தது. இப்பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல்வாழ உயிரின் பாதுகாப்பு வனத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர்கள் டால்பினை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தாமல் கடற்கரை மணலில்  புதைத்தனர்.

நேற்று முன்தினம் மண்டபம் புதுமடம் கடற்கரை பகுதியில் 10 அடி நீள கடல்பசு இறந்து கரை ஒதுங்கியதும், பரிசோதனைக்கு பின் புதைக்கப்பட்டது.  ஆனால் நேற்று டால்பினை வனத்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தாமல் புதைத்து விட்டனர்.  இறந்து கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்களை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதி இருந்தும், வனத்துறையினர் இதனை  நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.



Tags : beach ,Dhanushkodi , Dolphin, dying ,Dhanushkodi, beach
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...