×

மெல்ல மெல்ல இறங்கி வரும் தங்க விலை : சவரன் ரூ. 360 குறைந்து ரூ.39,584க்கு விற்பனை; 18 நாட்களில் சவரன் விலை ரூ.3,776 குறைந்தது

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.360 குறைந்தது. மேலும் கிராம் ரூ.5 ஆயிரத்திற்கு கீழ் சரிவை சந்தித்தது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5416க்கும், சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு 8ம் தேதி முதல் தங்கம் விலை சற்று குறைந்தது. தொடர்ந்து, தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.5,048க்கும், சவரன் ரூ.40,384க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.

ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.4993க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.39,944க்கும் விற்கப்பட்டது. அதே போல் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.39,584க்கு விற்கப்படுகிறது. கிராம் ரூ. 45 குறைந்து ரூ.4,948க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ரூ.40 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் கிராம் 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது நகை வாங்குவோரை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், “தங்கம் விலை தற்போதைய சூழ்நிலையில் ஒரு நிலையான இடத்தில் இருக்காது. இன்னும் சில நாட்களுக்கு தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் நிலைதான் காணப்படும்” என்றனர். இதனிடையே சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Shaver Rs. 360 , Yellow metal, gold, shaving, sale
× RELATED உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித்...