×

வளர்ப்பு நாய்களும் விஷம் கொடுத்து சாகடிப்பு 2 குழந்தையை கொன்று தாய், பாட்டி தற்கொலை: தஞ்சை அருகே பரிதாபம்

பட்டுக்கோட்டை: தஞ்சை அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண், தனது தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இரண்டு வளர்ப்பு நாய்களையும் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் தஞ்சை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் வாடகை வீட்டில் மாடியில் குடியிருந்து வந்தவர் சாந்தி (50). இவரது கணவர் ராஜகோபால்  ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகள் துளசி (21). இவருக்கு 2வயது மற்றும் 10 மாத பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்களது வீட்டில் காவலுக்காக 2 நாய்களும் வளர்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வரையிலும் வீடு திறக்கப்படவில்லை. இதனால் அருகில் இருந்தவர்கள், வீட்டு உரிமையாளர் சகாதேவனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உள்புறம் பூட்டி இருந்தது. ஜன்னல் வழியாக டார்ச் லைட்டை அடித்து பார்த்துள்ளார். உள்ளே சாந்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து பட்டுக்கோட்டை நகர போலீசார் இரவு 11 மணியளவில் அங்கு வந்தனர். மாடியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, அங்கு 2 பெண் குழந்தைகளுக்கும், 2 நாய்களுக்கும் விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு துளசியும், அவரது தாய் சாந்தியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், துளசி கழுத்தில் கயிறு இறுக்கிய தடம் உள்ளது. இதனால் முதலில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சாந்தி, குழந்தைகளை காப்பாற்ற முடியாது என நினைத்து விஷம் கொடுத்து விட்டு மகள் பிணத்தை குழந்தைகள் அருகில் போட்டுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். தொடர் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையில் தான் முழுவிவரங்கள் தெரியும். துளசியின் கணவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கவில்லை என்றனர். இதையடுத்து போலீசார், 4 பேரின் உடலையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல் 2 நாய்களின் உடலும் பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : suicide ,Tanjore , Pet Dog, Poison, Death, 2 Baby, Killing Mother, Grandmother Suicide, Tanjore Awful
× RELATED சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் மூதாட்டிக்கு மிரட்டல்