தமிழகத்தில் பாஜ வாக்குச்சாவடி குழுக்களை வலுப்படுத்த வேண்டும்: மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

சென்னை: தமிழகத்தில் பாஜவில் உள்ள வாக்குச்சாவடி குழுக்களை வலுப்படுத்த வேண்டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். தமிழக பாஜ மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்தது. கூட்டத்தை தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ், பொது செயலாளர் பி.முரளிதர்ராவ் ஆகியோர் கலந்து கொண்டு டெல்லியில் இருந்தவாறு கட்சியினருடன் பேசினர். தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக பாஜ சார்பில் வாக்குச்சாவடி குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக வாட்ஸ் அப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த செயலியில் உள்ளூர் பிரச்னைகளை எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் பேசியதாவது:தமிழகத்தில் பாஜவுக்கு மக்களிடம் எழுச்சி அதிகரித்துள்ளது. இந்த எழுச்சி நீடிக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த எழுச்சியானது எதிரொலிக்க போகிறது. பாஜவின் இலக்கு, நோக்கம், எண்ணம், ஒரே குறிக்கோள் வர உள்ள  சட்டப்பேரவை தேர்தல் மட்டும்தான். அதில் அத்தனை பேரின் கவனமும் இருக்க வேண்டும். வரும் காலங்களில் நாம் முழு நேரமும் கட்சி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>