×

கொரோனா பரிசோதனைக்கு வலியுறுத்திய நகராட்சி ஊழியர் மீது தாக்குதல்: தாம்பரத்தில் பரபரப்பு

தாம்பரம்: கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்திய நகராட்சி ஊழியர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 இடங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம்கள்  நேற்று நகராட்சி சார்பில் நடத்தப்பட்டன. கிழக்கு தாம்பரம், ரோஜா தோட்டம், திலகவதி தெருவில் மருத்துவ முகாம் நடைபெற்றபோது, அருள் நகரை சேர்ந்த தினேஷ் என்பவர்அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதை பார்த்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் அவரை தடுத்து நிறுத்தி, முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றக் கூடாது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் எனக்கூறி, முகாமில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், செந்திலை தகாத வார்த்தைகளில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த துப்புரவு மேற்பார்வையாளர், குமாரசாமி (58), தினேஷை தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு கபசுர குடிநீர் வைக்கப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து  குமாரசாமியை, தினேஷ் தாக்கிவிட்டு தப்பினார். இதில் தலை மற்றும் கையில் படுகாயம் அடைந்த குமாரசாமி வலி தாங்க முடியாமல் துடித்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் சித்ரா, சேலையூர் காவல் உதவி ஆணையர் சகாதேவன் மற்றும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tambaram ,corona test , Corona examination, insisted, municipal employee, assault, agitation in Tambaram
× RELATED தாம்பரம் -நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்