×

தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னை புறநகரில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை

* குற்றவாளிகளை பிடிக்காமல் போலீசார் மெத்தனம்
* பொதுமக்கள் பரபரப்பு புகார்

திருப்போரூர்: சென்னை புறநகரில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் போலீசார், குற்றவாளிகளை பிடிக்காமல் மெத்தன போக்கில் உள்ளனர் என பொதுமக்கள் பரபரப்பு புகார் கூறுகின்றனர். சென்னை புறநகர் பகுதியான நாவலூர் அடுத்த தாழம்பூர், அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் ஐசக் (72). ஓய்வு பெற்ற அரசு அச்சக அலுவலர். இவரது மனைவி வசந்தகுமாரி. கடந்த மாதம் 31ம் தேதி ஐசக், தனது மகன் ஜோயலுடன் பெங்களூரு சென்றார். மறுநாள் ஆகஸ்ட் 1ம் தேதி வசந்தகுமாரி, வீட்டில் தனியாக இருக்க அச்சமாக இருந்ததால், சித்தாலப்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வசந்தகுமாரி சென்றார்.

பின்னர், 3ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 26 சவரன் தங்க நகைகள், ரூ.41 ஆயிரம், ரூ.1 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2 வெளிநாட்டு கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். ஆக.3ம் தேதி, சிறுசேரி கிராமம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்சா. இவர்கள் தனியாக வசிக்கின்றனர். தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்த, மர்மநபர்கள் அவர்களது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள், ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

கடந்த ஜூலை 2ம் தேதி, பொன்மார் மலை தெருவில் வசிக்கும் சண்முகம் (48) என்பவர், மாங்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது, அவரது வீட்டை உடைத்து 15 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.12 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.ஏப்ரல் 20ம்தேதி பொன்மார், ராம்குமார் நகரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் காயத்ரி (34), தனது சொந்த ஊருக்கு சென்றதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டில் 18 சவரன், ரூ.3 ஆயிரம், 1 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள், சமையல் அறையில் இருந்த காஸ் ஸ்டவ், சிலிண்டர், மொபட், ஆர்சி புத்தகம், ஹெல்மெட் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

தாழம்பூர் காவல் நிலைய எல்லையில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருந்தாலும், போதிய போலீசார் இல்லாததால் இரவு ரோந்து பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கிறது. இதைக் கண்காணிக்க வேண்டிய காவல்துறை ஓஎம்ஆர் சாலையில் ஹெல்மெட் இல்லாமல் பைக்கில் செல்பவர்களை பிடித்து ரூ.100 அபராதம் வசூலிக்கின்றனர். கொள்ளை சம்பவத்தை பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. இதனால், சென்னை புறநகர் பகுதிகளான தாழம்பூர், காரணை, நாவலூர், சிறுசேரி, பொன்மார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனும், பீதியுடனும் உள்ளனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

* பொதுமக்களுக்கு மிரட்டல்
தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து, பொதுமக்கள் தொடர்பு கொண்டால் போலீசார் எடுப்பது இல்லை. காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தாலோ, புகார் குறித்து விசாரணைக்கு சென்றாலோ, பொதுமக்களை கால் கடுக்க பல மணிநேரம் காத்திருக்க வைப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்கனவே, போலீசார் மீது குறைகள் இருந்தால், தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என எஸ்பி கண்ணன் தெரிவித்துள்ளார். அதுபோன்று எஸ்பியிடம் புகார் செய்தாலும், பிறகு எங்களிடம் தானே நீங்கள் வரவேண்டும் என போலீசார், பொதுமக்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது.

* கண்துடைப்பு நாடகமா?
கடந்த மாதம் 23ம் தேதி வேங்கடமங்கலத்தில் சென்ட்ரிங் கடை நடத்தி வந்த வேல்முருகன் (72) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதற்காக 5 தனிப்படைகள் அமைத்தது கண்துடைப்பு நாடகமா என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : police station ,houses ,suburbs ,robberies ,Thalampur ,Chennai , Thalampur, police station boundary, Chennai suburb, locked house, serial robbery
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்