×

மண்குவாரி நடத்த எதிர்ப்பு பொக்லைன்கள் சிறைபிடிப்பு: புதுவாயல் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: புதுவாயல் ஊராட்சியில் உள்ள ஏரியில் அரசு அனுமதி பெற்று மண்குவாரி பணிகளை கடந்த வியாழக்கிழமை துவக்க வந்த நிலையில் ஊராட்சி தலைவர் அற்புதராணி சதீஷ்குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுவாயல் ஆரணி சாலையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் ஏற்கெனவே இந்த ஏரியில் 2 முறை குவாரி செயல்பட்டு ஏரியில் எங்கு பார்த்தாலும் பள்ளங்கள் உருவாகிய நிலையில் மீண்டும் குவாரி செயல்பட்டால் நீர் வளம் அழிந்துவிடும்.

மேலும் ஏரி உள்ள பகுதியில்85 ஏக்கர் பரப்பில் அரசின் சக்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ள நிலையில் இந்த குவாரி நடத்தினால் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கிய இடத்திலும் மணல் கொள்ளை நடைபெறும், அத்தோடு புதுவாயல் ஊராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக போடப்பட்ட இரு ஆழ்துளை கிணறுகள் ஏரிக்கரையோரம் உள்ள நிலையில் குவாரி செயல்பட்டால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படும் என  பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மண்குவாரி அமைக்க பணிகள்  செய்யவந்த பொக்லைன் இயந்திரங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் குவாரி பணிகளை துவக்க பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. தகவலறிந்த பெண்கள் 100 பேர் உள்ளிட்ட 300பேர் ஏரியில் இருந்த மற்றும் மணல் அள்ளும் கனரக வாகனங்களை மடக்கி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கனரக வாகனங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் புதுவாயல் ஏரியில் குவாரி செயல்படுவதை அரசு நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதாகவும் அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என கூறியதை பொதுமக்கள் ஏற்காமல் தங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் சமாதான பேச்சவார்த்தை தோல்வியடைந்த நிலையில் 4 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய் துறையினர் மாவட்ட ஆட்சியர் இறுதி முடிவு எடுக்கும் வரை குவாரியில் எந்த பணியும் நடைபெறாது என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். 


Tags : Mankuvari ,Puduvayal , Mankuvari, protest, capture of Boklines, Puduvayal villagers, demonstration
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...