×

திருத்தணி அடுத்த மாமண்டூரில் மீன்வளர்க்க ஏரியை ஏலம் எடுப்பதில் கோஷ்டி மோதல்

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய மாமண்டூர் ஊராட்சியில் மீன் வளர்க்க ஏரியை அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் ஏரி நிரம்பி வருகிறது. இதில் மீன்களை வளர்த்து விற்பனை செய்யும் வகையில் பொது ஏலம் விடுவது வழக்கம். பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு டெபாசிட் தொகையும் பெறப்பட்டது. இந்த ஏலம் விடுவதில் குளறுபடி உள்ளதாகவும் தனிநபர் ஆதிக்கத்தால் தன்னிச்சையாக செயல்பட்டு சுதந்திரமாக ஏலம் நடைபெறவில்லை என இரு கோஷ்டிகளிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடினர். இதனால் அங்கே தள்ளு முள்ளும், பரபரப்பும் ஏற்பட்டது.

விரைவில் ஏலத்தை முடித்துக்கொண்டதால் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அங்கே சிலர் முற்றுகையிட்டனர். மீன் குஞ்சுகளை வளர்க்க தீவனமாக இறந்த பிராணிகளின் கழிவுகளை தண்ணீரில் இடும்போது தண்ணீரின் தன்மை மாறி சுற்றுச்சூழல் கெடும் அபாயம் உள்ளது. பொதுப்பணித்துறை மூலம் ஏலத்தை நடத்திவிட்டு சில தனி நபர்கள் பல லட்ச ரூபாய்க்கு தனி ஏலம் நடத்த உள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டினர். தொடர்ந்து கூச்சல் ஏற்பட்ட நிலையில் கனகம்மா சததிரம் போலீசார் விரைந்து வந்து ஏலம் அமைதியாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்று டெபாசிட் கட்டியவர்கள் தவிர மற்றவர்கள் கலைந்து செல்லும்படி விரட்டி அடித்தனர். தொடர்ந்து நடராஜன் மகன் விஜயகுமார் என்பவர் ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்து அதற்கான தொகை செலுத்தினர். இதில் மீன்கள் வளர்க்கும் உரிமையை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டது.


Tags : clash ,Thiruthani ,aquaculture lake ,Goshti , Thiruthani, Mamandur, Fisheries, Lake Action, Goshti Connect
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து