×

2 நாள் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதால் பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்: 50 ஆயிரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

சென்னை: இ-பாஸ் எளிதாக கிடைப்பதால், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சென்னையிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் விடுமுறை முடிந்து நேற்று சென்னை திரும்பியதால் பரனூர் சுங்கச்சாவடி மற்றும் சென்னை ஜிஎஸ்டி சாலையில் 50 ஆயிரம் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-பாஸ் என்ற நடைமுறையால் மக்கள் இடம்பெயர முடியாமல் தவித்து வந்தனர். அதிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதனால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் வெளியூர் பயணங்களுக்கு தயாராகிவிட்டனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் இ-பாஸ் பெற்று பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட பயணமாக இருந்தாலும் வாகனங்களை வாடகைக்கு எடுக்க முடியாமல் தங்கள் மோட்டார் பைக்குகளையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு சக்கர வாகனங்களை விட இரு சக்கர வாகனங்களே ஆக்கிரமித்துள்ளது. ஆபத்தான பயணம் என்றாலும் பலர் வேறு வழியில்லாமல் எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் மோட்டார் பைக்குகளை பயன்படுத்துகின்றனர்.

இந்த சூழ்நிலையில், பல்வேறு பண்டிகைகள் பல ஊரடங்கின் போது வந்து சென்றதால் யாரும் கொண்டாட முடியவில்லை. இந்நிலையில், இ-பாஸ் தளர்வுக்கு பின் வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை பலர் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்பினர். மேலும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என இரண்டு நாள் விடுமுறை வந்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே பலர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஊர்களுக்கு சென்றனர்.அவர்கள் எல்லாம் நேற்று காலையில் சென்னை திரும்பினர்.

இதனால் சென்னைக்கு நுழைவு வாயிலாக கருதக்கூடிய பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பல மணி நேரம் அணிவகுத்து நின்றன. இதில் ஏராளமானோர் மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள்.அவர்கள் நீண்ட நேரம் பைக்குடன் காத்து நின்றதால் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோன்று, வண்டலூர் முதல் ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசலால் திணறியது. இரண்டரை கி.மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கொரோனா தாக்கம் சற்றும் குறையாமல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை நுழைவு வாயிலில் மணிக்கணக்கில் காத்து கிடக்கும் அளவுக்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : toll plaza ,Chennai ,Paranur , After 2 days holiday, Chennai, Paranur toll plaza, traffic jam, 50 thousand vehicles
× RELATED பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு...