×

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவிக்க காலஅவகாசம் கோரிய வழக்கு: மத்தியஅரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடக்கோரி மீனவர் அமைப்பு சார்பில் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழில் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ஏற்கனவே வரைவு அறிக்கைக்கு பிற மாநில உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அதன் மீது தற்போது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், இதே கோரிக்கையுடன் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வரைவு அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட மற்றொரு வழக்கு, நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாகவும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கையும் நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த இரண்டு வழக்குகளும் வரும் செப்டம்பர் 8ம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : draft ,EIA , Environmental Assault, Evaluation Draft Report, Objection, Delay, Case, Federal Response, Court
× RELATED நாட்டிலேயே முதல்முறை… மாநில மகளிர்...