×

புதிய கல்வி கொள்கை மீதான நிலைப்பாடு என்ன? தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் கேள்வி

சென்னை: தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தமிழக அரசு இப்போது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுக்கல்விக்கான மாநிலமேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு மற்றும் அமைச்சரவை தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து விவாதித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. மாநில அரசு தனது முடிவை தெரிவிப்பதற்கு முன்பாகவே, முதல்வரின் தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சரவைக்கு தெரிவிக்காமல் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துரைகளை மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பெறுவது குறித்து, மத்திய அரசின் பள்ளிக் கல்வித்துறை  செயலாளர், மாநில அரசுகளின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கல்வித் துறை செயலாளர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டிய அரசின் கொள்கை சார்ந்த நிலைப்பாடு சார்ந்தது. மாநில அரசின் அத்தகைய அதிகாரம் உள்ளதை கவனத்தில் கொள்ளாமல், மத்திய கல்வித்துறை செயலாளர் மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
மத்திய, மாநில அரசுகளின் அதிகார எல்லைகள் இந்திய அரசமைப்பு சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020ன் பல்வேறு கூறுகள் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தால் நடைமுறைப்படுத்த இயலும், அதன் விளைவாக மாநில அரசும், மாநில சட்டப் பேரவையும் தங்கள் அதிகாரங்களை இழக்க நேரிடும். அதனால், மத்திய கல்வித்துறை செயலாளர் 21ம் தேதி அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும். இந்த கடிதம் மீது தமிழக முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். மாநில அரசும் கல்விக் கொள்கை மீது உரிய கருத்துகளை வெளிப்படுத்த தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும்.

தமிழக சட்டப் பேரவையில்இது குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டும். கடந்த காலத்தில் பஞ்சாயத் ராஜ் சட்டம் இயற்றப்பட்ட போது, மாநில அரசுகள் எதிர்த்து குரல் கொடுத்தன. அதனால் அந்த சட்டம் திருத்தப்பட்டது. மத்திய அரசின் நிதி, மாநில அரசின் வழியாக உள்ளாட்சிகளுக்கு செல்வது உறுதி செய்யப்பட்டது. மாநில அரசின் உரிமையை காக்கும் அது போன்ற உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு இப்போதும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : government ,Tamil Nadu ,Educators , What is the position of the new education policy ?, Government of Tamil Nadu, educators question
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...