×

மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை திமுகவுக்கு இருக்கிறது: கலைஞர் சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கோட்டையையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமை திமுகவுக்கு இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மாவட்ட திமுக அலுவலகமான உதகை-கலைஞர் அறிவாலய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் தனியார் வசமிருந்த பேருந்துச் சேவையை முதன்முறையாக அரசுடைமை ஆக்கியது; நீலகிரி மாவட்டத்தில் தான்.

ஊட்டியில் பெரும்பான்மையாக வாழும் படுகர் சமூகத்தில் ஒரு பிரிவாக இருக்கும் துறையர் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதனை  நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு படுகர் சமூகத்தில் இருந்து முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி உருவாகி  இருக்கிறார் என்றால், அதற்கு தலைவர் கலைஞர் கொண்டு வந்த சீர்திருத்தமும் ஒரு காரணம். யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மல்லிகா என்ற பெண்ணை நானே தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னேன். தலைவர் கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடும், திமுகவின் சமூகநீதியும் தான் தனது வளர்ச்சிக்கு காரணம் என்று அந்தப் பெண் சொன்னார்.

மறைந்தும் மறையாமல் இருந்து இப்படி எத்தனையோ பேரை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார் தலைவர் கலைஞர். இப்படி இந்த மாவட்டத்துக்கு முதல்வர் கலைஞர் செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு முதல்வர், தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும் என்று அவர் ஒருமுறை சொன்னார். “அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பார்கள். ஆனால் அழாத பிள்ளைக்கும் பால் தரும் பொறுப்பு தாய்க்கும் உண்டு; இந்த அரசுக்கும் உண்டு. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தூங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையையும் தட்டி எழுப்பி பால் தருவாள். அந்தளவுக்கு பரிவு மிக்க தாய் தான் இந்த அரசாங்கம்” - என்று தனது ஆட்சிக்கான இலக்கணத்தை முதல்வர் கலைஞர் சொன்னார்.

அப்படித்தான் அவர் ஆட்சி செலுத்தினார். அதனால் தான் அவரை இந்த உலகம் இன்னும் வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது. அழுத பிள்ளையை பற்றியும் கவலைப்படுவது இல்லை; அழாத பிள்ளையைப் பற்றியும் கவலைப்படவில்லை. பசியைப் போக்கும் உணவு தராமல் பட்டினி போட்டு எல்லாப் பிள்ளைகளையும் கதறி அழவைக்கும் அரசாக இது இருக்கிறது. பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் ஆட்சியாக இருக்கிறது. பிள்ளைகளை மட்டுமல்ல; தாய் தந்தையரையும் சித்ரவதை செய்யும் அரசாக இருக்கிறது.

மொத்தத்தில் இது கொரோனாவை விட கொடூர அரசாக இருக்கிறது. இரக்கமே இல்லாத அரசாக இருக்கிறது. நீலகிரியில் மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதும்-அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும்-நான் உடனே வந்து பார்வையிட்டேன்; ஆறுதல் சொன்னேன். திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கினோம். ஆனால் முதலமைச்சர் வரவில்லை. மக்களைச் சென்று சந்திப்பது தன்னுடைய பணியல்ல என்று நினைக்கிறார் முதல்வர். அவர் முதலமைச்சர் ஆவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை; அதனால் அவரும் மக்களை மதிப்பது இல்லை. இருக்கும் கொஞ்ச காலத்தில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓட நினைக்கும் ஒரு கூட்டத்திடம் கோட்டை சிக்கிக் கொண்டுள்ளது.

இவர்களிடம் இருந்து கோட்டையையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமை நமக்கு இருக்கிறது. “கொடியவர்களிடம் இருந்து கோட்டையை மீட்போம்; கொள்ளையர்களிடம் இருந்து மக்களை மீட்போம்” - என்ற உறுதிமொழியை முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன் எடுப்போம். மலையில் உள்ள தலைவர் கலைஞர் சிலையின் முன் சபதம் எடுத்து-கடற்கரையில் உள்ள தலைவர் கலைஞர் நினைவிடத்தில் வெற்றியை சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் பேசினார். கொடியவர்களிடம் இருந்து கோட்டையை மீட்போம்; கொள்ளையர்களிடம் இருந்து மக்களை மீட்போம்.

Tags : DMK ,speech ,MK Stalin , To save the people, duty, DMK, artist statue, opening, MK Stalin's speech
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி