×

தமிழ்ப்பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாரதிய ஜனதா கட்சி தான்: ஜே.பி.நட்டாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜவின் செயற்குழுக் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்திய பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து, திமுகவை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், தேசிய உணர்வுக்கு எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுச் சீர்குலைக்கப் பார்க்கிறது என்றும் நட்டா அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். திமுக என்பது ஜனநாயக இயக்கம், வளர்ச்சியிலும், தேச உணர்வுகளிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, பாடுபட்டுவரும் இயக்கம். மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைக்கப்படுகிறது. அவரவர் தாய்மொழி மீது ஆதிக்க மொழியைத் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூகநீதிக் கொள்கையைத் தகர்த்திடத் திட்டமிடப்படுகிறது. ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

சமூக செயற்பாட்டாளர்கள், கருத்துரிமை போற்றும் சிந்தனையாளர்கள் - எழுத்தாளர்கள் மீது கொடூரச் சட்டங்களின்கீழ் வழக்குகள் போடப்பட்டுச் சிறைப்படுத்தப்படுகிறார்கள். இதுகுறித்து கேள்விகளை எழுப்புவது ஜனநாயகத்தின் ஓர் அடிப்படைக் கடமை. நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி என இந்திய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட திமுகவிற்கு அந்த உரிமை நிரம்பவே இருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டம், இந்தத் திருநாட்டை, மாநில அரசுகளின் ஒன்றியம் என்றே குறிப்பிடுகிறது. அத்தகைய மாநிலங்களின் உரிமைகளை மத்திய ஆட்சியாளர்கள் பறிக்கும்போது, எஜமானர்கள் வீட்டு வேலைக்காரர்களாக இருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் வாய்மூடி மவுனித்திருந்தாலும், மக்களின் மனதில் ஆட்சி செய்யும் ஜனநாயக இயக்கமான திமுக குரல்  கொடுக்கவே செய்யும்.

இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கி நிலைநிறுத்தியிருக்கும் நிலையில் இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது எனத் தமிழ்நாட்டின் நீண்ட நெடிய பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாக பாஜ இருக்கிறது. அதுகுறித்து கேள்வி எழுப்பினால், திமுகவை வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், நாட்டு நலனுக்கு எதிராகத் தூண்டிவிடுகிற கட்சி என்றும் குற்றம்சாட்டுவதென்பது பாஜ தலைமையின் இயலாமையையே காட்டுகிறது. பாஜ தலைவர்களிலேயே மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டவரான வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தின் அடிப்படையில் திமுக பங்கேற்றிருந்த போது தான், தலைவர் கலைஞர் மனசாட்சியாக விளங்கிய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உலக வர்த்தகம் தொடர்பான தோகா மாநாட்டில் பங்கேற்று, வல்லரசு வல்லூறுகளின் பிடியில் இந்தியா போன்ற வளரும் நாடுகள் சிக்காத வகையில் ஒப்பந்தங்களை உருவாக்கினார் என்கிற வரலாற்று ஏட்டின் பக்கங்களை நட்டா போன்றவர்கள் ஒருமுறை புரட்டிப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களவையில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, ஜனநாயகத்திற்கு விரோதமாக - அரசியல் அமைப்புச் சட்டம் சுட்டிக்காட்டும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக - மதவாதத்தையும் - மொழி ஆதிக்கத்தையும் முன்வைத்து நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கின்ற - நாட்டின் வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கின்ற கட்சியாக பாரதீய ஜனதா கட்சிதான் இருக்கிறது. ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும்  நடத்த முயற்சிக்கும் பாரதீய ஜனதா கட்சி தான், தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் - நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரியாகத் திகழ்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆள்பிடிக்கும் அரசியலைத் தமிழ்நாட்டிலும்  நடத்த முயற்சிக்கும் பாரதிய ஜனதா கட்சி தான், தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் எதிரியாகத் திகழ்கிறது.

Tags : JP Natta ,BJP ,Indian ,Tamil ,retaliation ,MK Stalin , The only enemy of Tamil culture and Indian unity is the retaliation of the BJP, JP Natta and MK Stalin.
× RELATED திருச்சியில் இன்று நடைபெற இருந்த...