×

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காரசார விவாதம் 6 மாதத்தில் புதிய தலைவர்: இடைக்கால தலைவராக நீடிக்கிறார் சோனியா காந்தி; மீண்டும் பதவிக்கு வர ராகுல் மறுப்பு; அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி: கடும் காரசாரமாக நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அடுத்த 6 மாதத்தில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும், அதுவரை சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மீண்டும் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என ராகுல் மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சோனியா காந்தி, கட்சியின் இடைக்காலத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் பதவியேற்று கடந்த 10ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. ஒரு தரப்பினர் நேரு குடும்பத்தவரை உள்ளடக்கிய கூட்டுத் தலைமை வேண்டும் எனவும் மற்றொரு தரப்பு ராகுல் காந்தி மீண்டும் கட்சி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், குலாம் நபி ஆசாத், ஏ.கே. அந்தோணி, ப. சிதம்பரம், ஆதிர் ரஞ்சன், கபில் சிபல், மணிஷ் திவாரி, பூபிந்தர் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவுகான், ரேணுகா சவுத்ரி, சசிதரூர், முகுல் வாஸ்னிக், ஜிதின் பிரசாதா, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா, வீரப்ப மொய்லி உள்பட 23 மூத்த தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், `கட்சிக்கு உத்வேகத்துடன் செயல்பட கூடிய முழு நேரத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். முன்பு போல, நாடாளுமன்ற கமிட்டி வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இதனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி இடைக்கால பதவியிலிருந்து விலகப் போவதாகவும், ராகுல் புதிய தலைவராக அறிவிக்கப்பட இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பான சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று காலை காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், ப. சிதம்பரம் உள்பட 48 காங்கிரஸ் காரிய கமிட்டி மூத்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிபந்தனைக்குட்பட்டே இதற்கு முன்பு தாங்கள் இருவரும் தலைவர் பதவியில் நீடித்ததாக குறிப்பிட்டனர்.

அப்போது பேசிய, சோனியா காந்தி இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து தான் விலக இருப்பதாகவும், கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை தொடரும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி, கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் இடைக்காலத் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களையும் குறிப்பாக மூத்த உறுப்பினரான குலாம் நபி ஆசாத்தை கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். காரசார விவாதத்துடன் தொடர்ந்து நடந்த காரிய கமிட்டி கூட்டம் 7 மணி நேரத்துக்கு நீடித்தது. இறுதியில் கூட்ட முடிவில், சோனியா காந்தியே இடைக்கால தலைவராக மேலும் 6 மாதத்துக்கு தொடர்ந்து நீடிப்பது என்றும், அதற்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது என்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இடைக்காலத் தலைவராக தொடர்வதற்கு சம்மதம் தெரிவித்த சோனியா, தான் இடைக்காலத் தலைவராக நீடிக்கும் போதே, முழு நேரத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளைத் தொடங்கும்படி காரிய கமிட்டியின் மூத்த உறுப்பினர்களை கேட்டு கொண்டுள்ளார். மக்களவை எம்பி.க்களில் பெரும்பாலானவர்கள் சோனியா தலைவராக தொடர வேண்டும் அல்லது ராகுல் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றனர். அதே நேரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூகேஷ் பாகல் ஆகியோர் சோனியா காந்தி விலகும் பட்சத்தில், ராகுல் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், நேரு குடும்பத்தை சாராத ஒருவரே தலைவராக நியமிக்கப்பட வேண்டுமென்ற தனது கருத்தில் ராகுல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதன் காரணமாக, காங்கிரஸ் உயர்மட்டத்தில் குழப்பமான சூழல் உருவாகி இருக்கிறது.

* தவறான தகவல்
ராகுல் பேசியதாக வெளியான மீடியா தகவல் குறித்து காங்கிரசின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, `சில ஊடகங்கள் பரப்பும் தவறான தகவல் மற்றும் செய்திகளால் தவறான பாதையில் செல்ல வேண்டாம். மோடியின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணத்தில், கட்சிக்குள்ளேயே சண்டையிட்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்தி கொள்ள கூடாது’ என பதிவிட்டுள்ளார். இதன் பின்பு பேசிய குலாம் நபி ஆசாத், ``காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நான் ராகுலிடம் பேசியது குறிப்பாக சில ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், பாஜ. உடன் எங்களுக்கு ரகசியத் தொடர்பு இருப்பதை நிருபிக்க முடியுமா என்று தான் கேட்கப்பட்டது. ராகுல் காந்தி, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலோ அல்லது வேறு பொதுவெளியிலோ பாஜ. உத்தரவின் பேரில் இந்த கடிதம் எழுதப்பட்டதாக கூறவில்லை’’ என தெரிவித்தார். ஆனால் முன்னதாக, காரிய கமிட்டி கூட்டத்தில் தன்னிடம் கடிதம் தொடர்பாக தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், குலாம்நபி ஆசாத் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

* ‘பாஜ ஆதரவாளர்கள்’ மீடியா தகவலால் சர்ச்சை
முன்னதாக காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``சோனியா காந்தி கங்கராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜ.வுடன் களத்தில் எதிர்த்து நின்ற சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் இருந்து அவர்கள் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டிருப்பது, பாஜ உடன் அவர்களுக்கு ரகசியத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க தோன்றுகிறது. இது பாஜ.வுக்கு சாதகமாக அமைந்துவிடும்,’’ என்று மறைமுகமாக சுட்டிக் காட்டி பேசியதாக மீடியாக்களில் செய்தி வெளியானது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு ராகுல் கூறிதயாக மீடியாவில் தகவல் வெளியானதும், அதிருப்தி அடைந்த மூத்த தலைவர் கபில் சிபல் தனது டிவிட்டரில், `கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு விஷயத்திலும் பாஜ.வுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட விட்டது கிடையாது. இருப்பினும், எங்களுக்கு பாஜ. உடன் ரகசியத் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது’ என கூறியிருந்தார். சிறிது நேரத்தில், ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனிப்பட்ட முறையில் தன்னை குறிப்பிடவில்லை என்று கூறியதால் அந்த பதிவினை நீக்கி விட்டதாக, மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

* திடீர் ஆலோசனை
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ``அதிருப்தி தலைவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது,’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லியில், மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்தின் இல்லத்தில் அதிருப்தி தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் கபில் சிபல், சசிதரூர், மணிஷ் திவாரி உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை.

Tags : leaders ,Sonia Gandhi ,Opposition ,Rahul ,interim leader ,meeting ,Karasara ,Congress Working Committee , Congress Working Committee meeting, new chairman in 6 months, Sonia Gandhi, Rahul refuses to run again; Dissatisfied leaders, counseling
× RELATED எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி...