×

நீட் தேர்வு எழுத வந்தே பாரத் விமானம் மூலம் இந்தியா வரலாம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், நீட் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. சுகாதார நெருக்கடி காரணமாக நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கினை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது.

இந்நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா வந்து தேர்வு எழுவது சிரமம் என்பதால் ஆன்லைனில் அல்லது வெளிநாடுகளில் தேர்வு மையங்களை வைத்து நீட் தேர்வினை நடத்த வேண்டுமென வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம், JEE தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வாய்ப்பு இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் NEET தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தேர்வாணையம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியது.

மேலும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டபோது, மாணவர் இந்தியா வருவதற்கு போதுமான விமான சேவையை மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும், குறிப்பிட்ட கால அளவிற்கு முன்னதாகவே தேர்வு குறித்து அறிவித்துவிட்டதாகவும், மாணவர்கள் வந்து தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் போதுமான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் மேத்தா தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மாணவர்கள் இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்கள் பயன்படுத்த நீதிமன்றம் வழிக்காட்டியுள்ளது. தொடர்ந்து மாணவர்களின் தனிமைப்படுத்துதல் காலகட்டம் குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், மாநில அரசு இந்த விவகாரத்தை பரிசீலிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



Tags : Supreme Court ,flight ,India ,Corona ,Vande Bharat , Corona, NEET Exam, Vande Bharat, Flight, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...