×

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து பள்ளி ஆசிரியர்கள், முதல்வர்களிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

டெல்லி: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாகப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசியக் கல்விக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் இதை அமல்படுத்துவது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களே முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். இதனால் இதை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க முடிவெடுத்தோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கென மத்தியக் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையப் பக்கத்தில் இன்று முதல் 31-ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம். இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் அனிதா கர்வால் கூறும்போது, பள்ளிக் கல்விக்கும் உயர் கல்விக்கும் தனித்தனித் தலைப்புகளில் அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்குக் கேள்வி - பதில் என்ற முறையில் ஆசிரியர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கலாம்.

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் என்சிஇஆர்டி நிபுணர் குழுவால் ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு அல்லது கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக, ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.



Tags : government ,principals ,school teachers ,Central Government , New Education Policy, Central Government
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா