×

கோவையில் மகனே தாயிடம் ஒரு ஏக்கர் நிலம் மோசடி செய்த அவலம்: நிலத்தை மீட்டு தருமாறு தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை

கோவை: கோவையில் போலி ஆவணம் மூலம் மகனே ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்துக்கொண்டு மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகாரளித்துள்ளார். பணம் நம் கையில் இருந்தால் அனைத்தையும் பெற்று விடலாம் என்ற எண்ணம் தற்போது அனைவரது மனதிலும் ஆழமாக பதிந்து வருகிறது. ஆதலால் இதுவரை சொத்து பிரச்சனையால் பல்வேறு குடும்பங்கள் பிரிந்துள்ளனர். இந்நிலையில் மனிதாபிமானத்தை இழந்த சில மானிட பிறவிகள் சொத்தாக கருதக்கூடிய தாயிடமிருந்தே சொத்துகளை அபகரித்து கொள்ளும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது, கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள். 90 வயதான இவரை அவரது இளைய மகனான சின்னராஜ் என்பவர் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் மூத்த மகனான மாணிக்கம் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து விளாங்குறிச்சியில் உள்ள தன்னுடைய நிலத்தை அபகரித்துக்கொண்டதாக ராமாத்தாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று அவர் புகார் அளித்துள்ளார். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிலத்தை அபகரித்து கொண்டதாக மூதாட்டி வேதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிலத்தை தனது மகனிடமிருந்து மீட்டு தருமாறு மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த காட்சி தற்போது காண்போரை கண்ணீரில் ஆழ்த்துகிறது.

Tags : Coimbatore ,land , Coimbatore, Son sheds, acre, land , mother, over land ,acquisition
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...