×

தூத்துக்குடியில் காவலர் உயிரிழப்பு குறித்து அரசியல் கட்சிகள் வாய்திறக்காதது வேதனை அளிக்கிறது!: ஐகோர்ட்

சென்னை: தூத்துக்குடியில் காவலர் உயிரிழப்பு குறித்து எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது வேதனை அளிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை அயனாவரத்தில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஜோசப் என்ற ரவுடி வெட்டி கொல்லப்பட்டார். ஏற்கனவே இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதனை எதிர்த்து வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018ம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்தனர். இதை ஆராய்ந்த நீதிபதிகள், கடந்த 20 ஆண்டுகளாக தேசிய குற்ற புலனாய்வு முகமை தமிழத்தில் அதிகப்படியான வழக்கை பதிவு செய்ததாகவும், சமீபத்தில் கூட கேரளா எல்லையில் நக்சலேட்டுகள் கைது செய்யப்பட்டதையும் சுட்டி காட்டினார்கள்.

மேலும் ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோதமாக ஆயுதம் இருப்பது தெரியவந்ததாக குறிப்பிட்ட நீதிபதிகள், ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்கள். குறிப்பாக தூத்துக்குடி எல்லையான வல்லநாட்டில் ரவுடியை பிடிக்க சென்ற போது வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியம் மரணம் குறித்து மிகவும் வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், சமுதாயத்திற்காக உயிர் நீத்த அவரது இழப்பிற்கு தமிழக அரசில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தவிர எதிர்க்கட்சிகள் என சொல்லப்படும் யாரும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த நீதிபதிகள், அங்கு மட்டும் வரிசையாக சென்று ஆறுதல் தெரிவித்து லட்ச கணக்கில் நிதியுதவி அளித்த எதிர்க்கட்சிகள், காவலர் சுப்பிரமணியன் குறித்து வாய்திறக்கவே இல்லை எனவும் காவலர் உயிர் அவர்களுக்கு உயிராக தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.

காவலர் இறுதி சடங்கிற்கு தமிழக டி.ஜி.பி., காவல்துறை உயரதிகாரிகள், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே கலந்துகொண்டதாகவும், எதிர்க்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை எனவும் ஓட்டுக்காக மட்டுமே அரசியல் வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற கருத்தையும் தெரிவித்தார்கள். அரசியல் நிர்வாகத்தை தாண்டி மற்ற அரசியல் கட்சிகளும் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு முன்னின்று உதவினால் தான் நம்பிக்கையோடும், துணிவோடும் காவல்துறையினர் உத்வேகமாக அமையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தார்கள். மேலும் மனித உரிமை ஆணையங்கள் ரவுடி மீது காட்டும் அக்கறையை காவல்துறை மீது காட்டுவதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ரவுடிகளையும் சமூகவிரோதிகளையும் தண்டிக்க கடுமையான சட்டம் நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்து இந்த வழக்கை மேலும் 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.

Tags : death ,parties ,policeman ,Thoothukudi ,Opposition parties , Opposition parties, silent,death , policeman, Thoothukudi
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு