×

ராகுல்காந்தி தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு விளக்கமளித்ததால் தனது ட்விட்டை திரும்ப பெறுவதாக கபில் சிபில் அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்த நிலையில் ராகுலின் கருத்துக்கு கபில் சிபில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று காலை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும், தனக்கு மாற்றாக வேறு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் என சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேசிய ராகுல்காந்தி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களை கடுமையாக விமர்சித்தார்.

கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் தான் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களின் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் ராகுலின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கபில் சிபில் தனது ட்விட்டர் பதிவில் ராகுல்காந்தி நாங்கள் பாஜகவுடன் கூட்டு வைத்தாக குற்றம்சாட்டுகிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை பாதுகாத்து வெற்றி பெற வைத்தோம். பாஜக அரசை வீழ்த்த மணிப்பூரில் கட்சியை பாதுகாத்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்சினையிலும் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிட்டதில்லை. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறோமா! என்று அவர் பதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கபில் சிபில் தனது முந்தைய ட்விட்டர் பதிவை நீக்கி விட்டார். தொடர்ந்து, ராகுல் காந்தி தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டதாகவும், அவர் என்னை பற்றி அப்படி எதுவும் கூறவில்லை என்று கூறினார். அதனால், எனது முந்தைய ட்விட்டை நான் திரும்ப பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.



Tags : Kapil Sibal ,Rahul Gandhi ,Congress , Kapil Sibal, Rahul Gandhi, Congress
× RELATED நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது;...