×

சினிமா, டிவி தொடர்கள் போன்றவற்றின் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி

* 5 மாதத்துக்கு பின் கட்டுப்பாடு தளர்வு
வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிப்பு

புதுடெல்லி : கொரோனா ஊரடங்கால் 5 மாதங்களுக்கு முன் சினிமா, டிவி தொடர்கள் போன்றவற்றின் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை, மத்திய அரசு நேற்று விலக்கியது.  கொரோனா பாதிப்பை தொடர்ந்து கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான  படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், இத்துறையை நம்பி உள்ள லட்சக்கணக்கான கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வரும் மத்திய அரசு, சினிமா மற்றும் டிவி தொடர்களின் படப்பிடிப்புகளுக்கான அனுமதியை நேற்று வழங்கியது. இதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று தெரிவித்தார். வழிகாட்டு நெறிமுறையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

* படப்பிடிப்பு தளத்திற்கு வருவோரின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட வேண்டும்.
*  படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்.
*  ஹேர்விக், மேக்கப் செட், உடை உள்ளிட்ட உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை முடிந்தவரை குறைக்க வேண்டும்.
*  குறைவான எண்ணிக்கையிலான நடிகர், நடிகைகளுடன் படப்பிடிப்பை நடத்த வேண்டும்.
*  படப்பிடிப்பில் உணவு வழங்கும் இடத்தில் கூட்டம் சேராமல் தவிர்க்க தேவையான முன்னேற்பாடு செய்ய வேண்டும்.
*   உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்கள் கட்டாயம் கையுறை பயன்படுத்த வேண்டும்.
*  வயதானவர்கள், கர்ப்பிணிகள், பிற நோய் பாதிப்புள்ளவர்கள் என வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ளவர்களை பாதுகாக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
*  ஸ்டூடியோக்கள், வெளிப்புற படப்பிடிப்புகளை பார்க்க பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது.  
*  தயாரிப்பு நிறுவனம் போதுமான பிபிஇ, மாஸ்க், கையுறை போன்றவற்றை வழங்க வேண்டும்.
*  வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், படப்பிடிப்பில் பங்கேற்பவர்களின் உடல் நலம் மற்றும் பயண ஏற்பாடுகளை கவனிக்கவும், கண்காணிப்பாளர்  ஒருவரை நியமிக்க வேண்டும்.

கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்களே விதிக்கலாம்
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத் துறையிடம் ஆலோசித்து, சர்வதேச நிலவரங்களை ஆராய்ந்து, இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன் மூலம், கொரோனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பை பெறுவதற்கு இது உதவும். எல்லா மாநிலங்களும் இதை செயல்படுத்தும் என நம்புகிறோம். மாநிலங்களில் உள்ள நிலவரங்களை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம்,’’ என்றார்.

Tags : Javadekar , Javadekar ,resuming film, TV shooting
× RELATED கால்நடைகள் அதிகமானதால் நாட்டில் தண்ணீர் பஞ்சம்: மத்திய அமைச்சர் வேதனை