காங்கிரஸ் கட்சி உங்கள் அல்லது ராகுல் காந்தியின் கைகளில் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும்: சோனியா காந்திக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என சோனியா காந்திக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பது தொடர்பான தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த முறை நடந்த காரிய கமிட்டி கூட்டத்திலேயே இது தொடர்பான விவாதங்கள் எழுந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவரை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் பல்வேறு மாநில தேர்தல்கள் வருகிறது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள புதிய தலைவர்களை நியமிக்க வேண்டும், என்று மூத்த தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். முறையாக பொறுப்பேற்ற திறமையான தலைவர் வேண்டும். இடைக்கால தலைவர் கிடையாது.

களத்தில் இறங்கி பணிகளை செய்யும் நபர் ஒருவர்தான் எங்களுக்கு தலைவராக வேண்டும், என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகும் திட்டத்தில் இல்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியாகாந்திக்கு எழுதிய கடிதம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கடிதத்தில் கட்சியில் அடிப்படை மாற்றங்கள் வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் அமைப்பு ரீதியான பல்வேறு மாற்றங்களும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. காங்கிரசின் மூத்த தலைவர்களான குலாம்நபி ஆசாத், கபில்சிபல், சஷி தரூர், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு சோனியாகாந்திக்கு அனுப்பியுள்ளனர். கட்சித் தலைமைக்கு எழுதிய இந்த ரகசிய கடிதம் வெளியானது காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது.

இக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இடைக்கால பதவியிலிருந்து ராஜினாமா செய்ய விரும்புவதாகவும், முழு நேர தலைவரை தேர்வு செய்யுமாறும் காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்களுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு, காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் உங்கள் தலைமையின் மீதான எங்கள் முழுமையான மற்றும் உறுதியான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். நீங்கள் சிரமங்களை எதிர்கொள்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆயினும், எங்கள் தலைவராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். காங்கிரஸ் கட்சி உங்கள் கைகளில் அல்லது ராகுல் காந்தி அவர்களின் கைகளில் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும். வேறு எவராலும் அதை ஈடு செய்ய முடியாது, என்று ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.  

Related Stories: