ஞாயிறு முழு ஊரடங்கையும் மீறி சங்கமேஸ்வரர் கோயிலில் ராஜேந்திரபாலாஜி தரிசனம்: பவானி கூடுதுறையில் புனித நீராடலும் செய்தார்

ஈரோடு: அரசு விதிகளை மீறி ஊரடங்கு நாளில் ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். இது, தமிழக பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தேசிய ஊரடங்கு மார்ச் 25-ந்தேதியில் இருந்து அமலானது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் மே மாதத்தில் ஊரடங்கு தளர்வை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ஊரடங்கு தளர்வு உள்ளது. குறிப்பாக, பக்தர்களின் கோரிக்கையையேற்று ஆண்டுக்கு ரூ.10,000 வருமானமுள்ள சிறிய கோயில்களை திறந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசிக்கலாம் என்று அரசு அறிவித்தது.

ஆனால், ஆகஸ்ட் மாத ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளது. இந்நாளின்போது, கோயில்கள் வழிபாடு தடை மற்றும் புனித நீராடல் தடை, கடைகள் மூடல், அவசியமின்றி மக்கள் நடமாடக்கூடாது என்றும் அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சில நாட்களாகவே பெரிய கோயில்களுக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம், கன்னியாகுமரி முக்கடல் திரிவேணி சங்கமத்தில் அரசு விதிகளை மீறி புனித நீராடினார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு நேற்று சென்று புனித நீராடினார். பின்னர், சங்கமேஸ்வரர் கோயில் சென்றார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்காக கோயில் நடை திறக்கப்பட்டு பூஜை நடந்தது.

* புனித நீராடினேன்

இதன்பின்பு, அமைச் சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் மூலிப்பட்டி என்ற கிராமத்தில் தவசிலிங்க சுவாமி எங்களது குல தெய்வம். கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக திருச்செந்தூர், பாபநாசம், பவானி கூடுதுறை போன்ற புண்ணிய நதிகளில் புனித நீராடி தீர்த்தம் எடுத்துக் கொண்டு செல்கிறேன். அதற்காக பவானி கூடுதுறையில் நீராடி, சங்கமேஸ்வரரை வழிபட்டு தீர்த்தம் எடுத்து செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* பொதுமக்கள் அதிருப்தி

பெரிய கோயில்கள் திறக்கக்கூடாது; புனித நீராடல் கூடாது என்று இந்து அறநிலையத்துறை மற்றும் அரசு உத்தரவு உள்ளது. இதனால், மாத அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களில் புனித நீராட முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். பெரிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யமுடியாமல் வேதனையில் உள்ளனர். ஆனால், அரசு உத்தரவை மீறி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, புனித நீராடியதுடன் அவருக்காக கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>